nomini
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 16–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மனு தாக்கல் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை காலை தேர்தல் கமிஷன் வெளியிட உள்ளது.
தேர்தல் நடத்துவதற்காக 234 தொகுதிகளிலும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் ஒரு முதன்மை அதிகாரி, 2 உதவி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம்தான் வேட்புமனுக்களை அளிக்க வேண்டும்.
மனுதாக்கல் செய்ய நாளை (22–ந்தேதி) முதல் 29–ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 24–ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற 7 நாட்களும் மனுதாக்கல் செய்யலாம். இந்த 7 நாட்களில் 25–ந்தேதியும் (திங்கட்கிழமை) 29–ந்தேதியும் (வெள்ளிக்கிழமை) சுப முகூர்த்த தினங்களாகும்.
மனுதாக்கல் தொடங்கும் நாளைய தினம் பிரதமை திதி தினமாகும். எனவே பெரும்பாலானவர்கள் முதல்நாள் மனு செய்ய வாய்ப்பு இல்லை.
25–ந்தேதி முகூர்த்த தினத்துடன் திரிதியை திதியாகவும் உள்ளது. எனவே 25–ந்தேதி நிறைய பேர் மனு செய்ய முடிவு செய்துள்ளனர். முதல்–அமைச்சர் ஜெயலலிதா 25–ந்தேதி ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை அளிக்க உள்ளார் என்று தெரியவந்துள்ளது.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா மனுதாக்கல் செய்யும் 25–ந்தேதி மற்ற 233 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் மனு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனுக்களை பூர்த்தி செய்து தயார் நிலையில் உள்ளனர். 25–ந்தேதி குறிப்பிட்ட நேர அவகாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வார்கள்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி 25–ந்தேதி திருவாரூரில் வேட்புமனு தாக்கல் செய்வார் என்று ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றைய தினம் பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.