ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பேரணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைக் கடுமையாகச் சாடி உள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.  இங்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாகப்  பிரசாரம் செய்து வருகிறார். இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கக் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் தீவிரமாக முயன்று வருகின்றனர்.  ராகுல் காந்தி தனது பிரசாரத்தில் தேசிய குடியுரிமைப் பட்டியல் குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறார்.

அவர் தனது பிரசாரத்தில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் ரத்து, பழங்குடியினருக்கு பாதுகாப்பு, அவர்களுக்கு இலவச நிலம் உள்ளிட்டவை குறித்துக் கூறி வருகிறார்.  அத்துடன் இங்கு பல வருடங்களாக வாழ்ந்து வருபவர்களை  தேசிய குடியுரிமைப் பட்டியலைக் காரணம் காட்டி வெளியேற்றினால் அவர்கள் எங்கு செல்வார்கள் எனவும் எதை உண்பார்கள் எனவும் கேள்விகள் எழுப்பி வருகிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக சார்பில் நடந்த ஒரு பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ராகுல் காந்தி தேசிய குடியுரிமைப் பட்டியலை ஏன் மத்திய அரசு அமைக்கிறது,  அவர்களை ஏன் வெளியேற்றுகிறது,  அவர்கள் எங்கு செல்வார்கள் மற்றும் எதை உண்பார்கள் எனக் கேட்டு வருகிறார்.  நான் கேட்கிறேன், அவர்களை ஏன் வெளியேற்றக்கூடாது?  நாட்டில் ஊடுருபவர்கள் உங்களுக்கு மாமனா? மச்சானா?

வரும் 2024 ஆம் வருடத்துக்குள் நாட்டிலுள்ள அனைத்து ஊடுருவாளர்களையும் இந்த அரசு நாட்டை விட்டு வெளியேற்ற உள்ளது.    நீங்கள் உங்கள் கட்சி கடந்த 55 வருடங்களாக நாட்டுக்கு எந்தெந்த முன்னேற்றத் திட்டங்கள் இயற்றின என்பதை முதலில் கணக்கிட்டு சொல்லுங்கள்.  நாங்களும் இந்த ஐந்து வருடத்தில் நடத்திய சாதனைகளைப் பட்டியல் இடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

ராகுல் காந்திக்கு பதில் அளிப்பது போல் இவ்வாறு அமித்ஷா  தனிப்பட்ட முறையில் சாடி உள்ளது கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.