கோரக்பூர்

க்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டு குழந்தைச் சாவுகள் ஆரம்பித்த உடனேயே, பெற்றோர்களை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்டதாக ”தி டெலிகிராஃப்” என்னும் ஆங்கில செய்தித்தாளில் செய்தி வந்துள்ளது.

உத்திர பிரதேசம் கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் ஆக்சிஜன் சப்ளையருக்கு பணம் தராததால் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டு சுமார் 60 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.   ஆனால் மாநில முதல்வர் யோகி இந்தச் சாவுகள் ஆக்சிஜன் நிறுத்தத்தால் நிகழவில்லை என தொடர்ந்து கூறி வருகிறார்.  அதே நேரத்தில்  பா ஜ க எம் பி சாக்‌ஷி மகாராஜ் இது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்ப்பட்ட ஒரு கோடூரமான நிகழ்வு என தெரிவித்துள்ளார்.

மருத்துவ மனையில் ஆக்சிஜன் நிறுத்தப்பட்டு குழந்தைகள் இறப்பு அதிகமானதும், போலீசார் வலுக்கட்டாயமாக குழந்தைகளின் பெற்றோர்களை வார்டை விட்டு வெளியேற்றியதாக “தி டெலிகிராப்” ஆங்கில நாளிதழிடம் சுமார் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.   பிறகு இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க,  மருத்துவமனை வளாகத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அமித் சிங் என்பவர், “என் மகள் ப்ரதிக்ஞா அநியாயமாக கொல்லப்பட்டாள்.  அந்த சாவு செய்தி அறிவிக்கப்பட்டதும், போலீசாரால் நான் வளாகத்தை விட்டே துரத்தப்பட்டேன்” என கண்ணீருடன் கூறினார்.   குஷிநகரை சேர்ந்த விஜய் லால், ”எனது மகள் பிறந்த 16ஆம் நாளில் மரணம் அடைந்துள்ளாள்.  என்னை என் மகளின் பிணத்துடன் ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவில் ஏற்றி ரெயில்வே ஸ்டேஷனில் கொண்டு போய் விட்டு,  திரும்ப வரக்கூடாது என போலீசார் மிரட்டினர்.  நான் பயந்தேன்”  என தொலைக்காட்சிகளில் தெரிவித்துள்ளார்.

பட்ரவுனா பகுதியை சேர்ந்த மிருத்யுஞ்சய் என்பவரின் மகன் இளம்குழந்தைகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்தார்.  அவர், “கடந்த புதன் இரவு என்னை மருத்துவமனை ஊழியர்கள் வார்டை விட்டு வெளியே தள்ளி விட்டனர்.  நான் மறுத்தும் விடவில்லை.   சில நிமிடங்களுக்குள்ளாக என் மகனின் சடலத்தை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தார்.   போலீசார் என்னை மிரட்டி மருத்துவமனை வளாகத்தை விட்டு உடனடியாக வெளியேற்றினார்கள்” என தெரிவித்துள்ளார்.

மாவட்ட நீதிபதி ராஜிவ் ரவுதேலா அதிக அளவில் போலீசார் ஆக்சிஜன் சிலிண்டர்களை சேகரித்து மருத்தவமனையில் சேர்க்கவே மருத்துவமனைக்கு அனுப்பியயதாகவும், போலீசார் குழந்தைகளின் உறவினர்களை விரட்டியதாக வரும் தகவல்கள் பொய்யானவை எனவும் தெரிவித்தார்.

மருத்துவமனை தரப்பில் வியாழன் மற்றும் வெள்ளியன்று சுமார் 30 குழந்தைகள் மரணம் அடைந்ததாக தெரிவித்துள்ளது.   ஆனால் அதற்கு முன்பே புதன்கிழமை அன்று 27 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பணபட்டுவாடா பற்றி மாநில சுகாதார அமைச்சர், “பணத்தை கல்லூரி முதல்வர் மிஸ்ராவின் வங்கிக்கணக்குக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்றே அனுப்பப்பட்டுவிட்டது.  ஆனால் ஆக்சிஜன் சப்ளையரான புஷ்பா சேல்ஸ் பிரைவேல் லிமிடெட் என்னும் நிறுவனத்துக்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்றுதான் பணம் கொடுக்கப்பட்டுள்ளது.   அது மட்டுமின்றி முழுத்தொகையும் தரப்பட்டதாகவும் தெரியவில்லை.   எனவே மிஸ்ரா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் அளித்த ராஜினாமாவும் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

கல்லூரி முதல்வர் இது பற்றி கூறுகையில், ”நான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளேன் என்பது எனக்கே தெளிவாகத் தெரிகிறது.   எனது பணியிடை நீக்க உத்தரவு பிறப்பிக்கும் முன்பே நான் எனது ராஜினாமாவை அளித்து விட்டேன்.   போலீசார் குழந்தைகளின் பெற்றோர்களை விரட்டி அடித்ததாக கூறுவது மிகவும் தவறான தகவல்” என்றார்.

மருத்துவத்துறை அதிகாரி ஒருவர் ராஜீவ் மிஸ்ராவுக்கு லக்னோவில் இருந்து ஆக்சிஜன் சப்ளையருக்கு தர வேண்டிய பணத்தை நிறுத்தி வைக்கபட சொன்னதாக தெரிவித்துள்ளார்.  இதற்கு அந்த நிறுவனம் கவனிக்க வேண்டியவர்களை கவனிக்காததே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

சுமார் 5000க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும், ஏதும் வன்முறை சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கவும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்

இந்த கோரச் சாவுகளுக்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குலாம் நபி ஆஸாத் மருத்துவமனைக்கு உடனடியாக சென்று பார்வையிட்டார்.   இந்த சாவுகளுக்கு பொறுப்பேற்று யோகி உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகவேண்டும் எனக் கூறினார்.  மாநில காங்கிரஸ் பிரமுகர் திவிஜேந்திர திரிபாதி, அரசு மரணமடைந்த குழந்தைகளின் பெற்றோர்களை பயமுறுத்தி வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த மரணங்கள் நிகழ்வதற்கு சில மணி நேரங்கள் முன்பாக, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதே மருத்துவமனைக்கு வந்திருந்ததும், புது ஐ சி யு வார்டை துவங்கி வைத்ததும் தெரிந்ததே.

ஆக்சிஜன் சப்ளையர் புஷ்பா சேல்ஸ் அதிகாரி அமித் ஆக்சிஜன் மீண்டும் சப்ளை செய்யப்பட்டுள்ளது என்றும் ஒரு ஆயில் டேங்கர் திரவ நிலை ஆக்சிஜன் விரைவில் அனுப்பபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

Thanx : THE TELEGRAPH