சென்னை

சென்னை நகரில் 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தத்துக்கான மாதாந்திர பாஸ் வழங்குதல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது

சென்னை நகரில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.   இந்த மெட்ரோ ரயில்களில் தினமும் பயணம் செய்வோர் எண்ணிக்கை சராசரியாக ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. குறிப்பாக ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. ஆகையால் ரயில் நிலையங்களில் உள்ள வாகனம் நிறுத்தும் இடங்களில் வாகனங்கள் வருகையும் அதிகரித்துள்ளது.

வழக்கமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பலரும் தங்கள் வீடுகளில் இருந்து இருசக்கர வாகனங்கள், கார்களில் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்து தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்து மெட்ரோ ரயில்களில் பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனர். இதனால் விமான நிலையம், ஆலந்தூர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர் உள்ளிட்ட 23 ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடவசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பயணிகள் அதிகரிப்பு காரணமாக  சில மெட்ரோ ரயில் நிலையங்களில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.  அங்கு போதிய இடம் இல்லாததால், பயணிகள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது எழும்பூர், கிண்டி உள்ளிட்ட 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் மாதாந்திர பாஸ் வழங்குவது திடீ ரென நிறுத்தப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் இது குறித்து, “மெட்ரோ வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்கள் நிறுத்துவது அதிகரித்துள்ளது. அதிலும் சில பயணிகள் தங்கள் வாகனங்களை மாதக்கணக்கில் இங்கேயே நிறுத்தி வைக்கின்றனர். இதனால், இட நெருக்கடி ஏற்படுகிறது. ஆகவே, நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் எழும்பூர், கிண்டி,அண்ணா நகர் கிழக்கு, திருமங்கலம், உயர் நீதிமன்றம், மண்ணடி, நங்கநல்லூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர பாஸ் வழங்குவது நிறுத்தப்படுகிறது. அதே வேளையில் தினசரி கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்தும் வசதியில் எந்த மாற்றமும் செய்யவில்லை.” எனத் தெரிவித்துள்ளனர்.

மெட்ரோ ரயில்  பயணிகள், ‘‘மெட்ரோ ரயில் நிலைய வளாகங்களில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க வேண்டும் அல்லது கூடுதல் இடம் தேர்வு செய்து விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.   மெட்ரோ பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் எந்த வகையிலும் தடைபடாமல் இருக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கருத்து கூறி உள்ளனர்.