திருச்செங்கோடு

மிழ் நடிகர் மாரிமுத்து மீது தங்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசியதாகக் காவல் நிலையத்தில் ஜோதிடர்கள் புகார் அளித்துள்ளனர்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் ஜோதிடம் குறித்த ஒரு விவாதம் நடந்தது. விவாதத்தில் கலந்து கொண்ட  திரைப்பட நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து ஜோதிடர்களிடம் நேரடியான வாக்குவாதத்தில் ஈடுபட்டுப் பல கேள்விகளைக் கேட்டார்.

அவர் அப்போது ஜோதிடர்களை ஒருமையில் பேசியதாகவும், தரக்குறைவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. ஜோதிடர்கள்  இதனால் கோபமடைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாரிமுத்துவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இதில் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஜோதிடர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு திருச்செங்கோடு நகர காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தங்களை தரக்குறைவாகவும், ஒருமையிலும், மரியாதைக் குறைவாகவும் பேசிய மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் மனு கொடுத்தனர். இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து ஜோதிடர்கள் கலைந்து சென்றனர்.