டில்லி

புதிய ஊதியச் சட்டத்தின்படி பணியில் இருந்து ராஜினாமா செய்வோருக்கு இரு தினங்களில் ஊதிய நிலுவைத் தொகை முழுவதுமாக வழங்க வழி செய்யப்பட்டுள்ளது.

புதிய தொழிலாளர் நலச்சட்டம் உருவாக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததாகும்.  இந்த சட்டத்தின் மூலம் ஊழியர்களின் ஊதியம், பணிப் பாதுகாப்பு, பணியிட பாதுகாப்பு, உள்ளிட்ட  பல அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டம் முன்பிருந்த  பல சட்டங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்படுகிறது.

தற்போதுள்ள ஊதிய வழங்கல் சட்டம் 1936 இன்படி பணியில் இருந்து விலகியோருக்கு ஒரு சில இனங்களைத் தவிர மற்ற ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது,  அந்த ஒரு சில இனங்களில் போனஸ், வீட்டு வாடகைப்படி, மருத்துவ உதவி,  பிராவிடண்ட் ஃபண்டில் பணி அளிப்போரின்  பங்கு, கிராசுட்டி, பயணப்படி உள்ளிட்டவை அடங்கும்.

இந்த ஊதிய நிலுவைத் தொகையை வழங்கக் காலக்கெடு ஏதும் சரியாகக் குறிப்பிடப்படவில்லை.  எனவே பல நேரங்களில் பணியில் இருந்து விலகுவோருக்கு உடனடியாக ஊதிய நிலுவை கிடைப்பது மிகவும் கடினமாக இருந்தது.   இந்தக் குறைகள் புதிய ஊதியச் சட்டம் 2019 ல் நீக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஊதியச் சட்டத்தில் ஊதியத்தில் அனைத்துப் படிகள் மற்றும் உதவித் தொகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.  அதாவது அடிப்படை ஊதியம், பஞ்சப்படி, பயண உதவி, வாடகைப்படி, விடுமுறை பயணப்படி உள்ளிட்ட அனைத்தும் ஊதியம் என கருதப்படும் என அறிவித்துள்ளது.  அத்துடன் பணியை விட்டு நிர்வாகம் விலக்கினால் 50% உதவித் தொகை அளிக்க வேண்டும் எனவும் விதியில் உள்ளது.

குறிப்பாக பணியில் இருந்து விலகினாலும் மற்றும் நிர்வாகத்தால் விலக்கப்பட்டாலும் முழு ஊதியம் அதாவது அனைத்து படிகள் மற்றும் உதவித் தொகைகள் சேர்ந்து அனைத்தையும் கடைசியாக பணி புரிந்த இரு தினங்களுக்குள் அளிக்கப்பட வேண்டும் என விதியில் கூறப்பட்டுள்ளது.   இதன்படி ஒரு ஊழியர் இந்த மாதம் 10 ஆம் தேதி வரை பணி புரிந்திருந்தால் அவருக்குப் படிகள் உள்ளிட்ட முழு ஊதியமும் 12 ஆம் தேதி அன்று வழங்கப்பட வேண்டும்.