டில்லி

திர்க்கட்சிகள் நாட்டு மக்களைக் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து தவறாக வழி நடத்துவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தம் மசோதாவாகத் தாக்கல் செய்ததில் இருந்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.   அத்துடன் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.  நாடெங்கும் உள்ள பல தரப்பு மக்களும் இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இது குறித்து, “குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தில் நாட்டு மக்களை அனைத்து எதிர்க்கட்சிகளும் தவறாக வழி நடத்துகின்றன.  இந்த சட்டப்படி சிறுபான்மை சமூகத்தினர் குடியுரிமை பறிக்கப்படும் என்னும் கேள்விக்கு இடமே கிடையாது.  அதை மீண்டும் நான் வலியுறுத்துகிறேன்.

இந்த சட்டத் திருத்தத்தில் அதற்கான வழிவகைகள் கிடையாது.   இந்த சட்டத்திருத்தம் நேரு – லியாகத் ஒப்பந்தத்தில் ஒரு அங்கம் என்பதை நான் காங்கிரஸுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.   இது வாக்கு வங்கி அரசியலுக்காக 70 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை.  எங்கள் அரசு இதை நிறைவேற்றி லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களுக்குக் குடியுரிமை வழங்க உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.