இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க் வரை சென்று திரும்பும் லண்டன் – எடின்பர்க் – லண்டன் சைக்கிள் போட்டி கடந்த 7 ம் தேதி துவங்கியது.

மொத்தம் 1540 கி.மீ தூரத்தை 128 மணி நேரத்தில் கடக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சைக்கிள் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் கலந்து கொண்டனர்.

போட்டியில் யார் முதலில் வருகிறார்கள் என்பது போன்று இல்லாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூரத்தை கடப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு இந்த போட்டி நடத்தப்படுகிறது.

ஐரோப்பாவில் மிகவும் கடினமான மற்றும் சவாலான பாதையில் சைக்கிள் ஓட்டும் போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் இந்தப் போட்டியில் சைக்கிள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்ட நடிகர் ஆர்யா கலந்து கொண்டார்.

நடிகர் ஆர்யா 12 பேர் அடங்கிய தனது ‘ரைடர்ஸ்’ குழுவுடன் இந்த போட்டியில் கலந்து கொண்டார்.

இவரது ரைடர்ஸ் குழுவுக்கான ‘ஜெர்ஸி’-யை நடிகர் சூர்யா ஆக். 5 ம் தேதி அறிமுகப்படுத்தினார்.

தினமும் பல்வேறு சோதனைச் சாவடிகளை குறித்த நேரத்தில் கடந்த ஆர்யாவின் ரைடர்ஸ் குழு 125 மணி நேரத்தில் இந்தப் போட்டியை நிறைவு செய்தது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்யா பதிவிட்டிருந்ததை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.