டெல்லி: மத்தியஅரசு பணியில் இருக்கும் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு 15 நாட்கள் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இதை மாநில அரசும் பின்பற்றுமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மத்தியபணியாளர் நலன் துறை அமைச்சம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது.

மத்திய அரசு ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறபோது, வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்கிறபோது, பிற மையங்களில் தனிமைப்படுத்தப்படுகிறபோது 20 நாட்கள் வரையில் சிறப்பு விடுப்பு/ ஈட்டிய விடுப்பு வழங்கப்படும். இ ந்த விடுப்பு, கொரோனா பரிசோதனை முடிவு ‘பாசிட்டிவ்’ என வந்த நாளில் இருந்து நடைமுறைக்கு வரும்.

‘பாசிட்டிவ்’ என வந்த நாளில் இருந்து ஆஸ்பத்திரியில் 20 நாளுக்கு மேல் சிகிச்சை பெறுகிறபோது, அதற்கான ஆதார சான்று அளித்து விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.

மத்திய அரசு ஊழியரை  சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் அல்லது பெற்றோர் கொரோனா வைரஸ் தொற்று பாதித்து, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறபோது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்கப்படும்.

தொடர்ந்து மருத்துவமனையில் சிசிச்சை பெற வேண்டி இருந்தால்வ, அவர்கள்  ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படுகிற நாள் வரையில் விடுப்பு அனுமதிக்கப்படும்.

ஒரு கொரோனா நோயாளியுடன் நேரடி தொடர்பு கொண்டதால், வீட்டில் மத்திய அரசு ஊழியர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளும்போது 7 நாட்கள் அவர்கள் வீட்டில் இருந்து பணியை கவனிப்பதாகவோ அல்லது பிற வேலையில் (ஓ.டி.) ஈடுபட்டிருப்பதாகவோ எடுத்துக்கொள்ளப்படும்.

கட்டுப்பாட்டு பகுதியில் மத்திய அரசு ஊழியர்கள் இருந்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும்போது, அந்த பகுதியானது, கட்டுப்பாட்டு பகுதி அறிவிப்பில் இருந்து விலக்கப்படுகிற வரையில், வீட்டில் இருந்து பணி செய்வதாகவோ, பிற பணியில் (ஓ.டி.) ஈடுபட்டிருப்பதாகவோ கருதப்படும்.

இந்த உத்தரவுகள் அனைத்தும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து, அடுத்த உத்தரவு வரும் வரையில் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு  மத்திய பணியாளர் நலன் துறை அமைச்சம் அறிவித்துள்ளது.