டெல்லி: நாடு முழுவதும் இன்று கொரோனா உயிரிழப்பு 6,148 பதிவானது எப்படி என மத்தியஅரசு விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் குறித்த தகவல்களை மத்திய சுகாதாரத்துறை தினசரி வெளியிட்டு வருகிறது.இன்று காலை வெளியிட்ட கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு தகவல்கள் வெளியிடப்பட்டதில், உயிரிழப்பு 6,148 என கூறப்பட்டிருந்தது. இந்த உயிரிழப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று அறிவிக்கப்பட்டுள்ள 6, 148 உயிரிழப்புகளும் கடந்த 24 மணிநேரத்தில் நடந்தவை இல்லை என மத்திய சுகாதாரத்துறை  விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, பீகாரில் கொரோனா உயிரிழப்பு மறுகணக்கீடு செய்யப்பட்டு, கூடுதலாக 3,951 உயிரிழப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பீகாரில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 500-ல் இருந்து 9 ஆயிரத்து 451 ஆக அதிகரித்துள்ளது. இந்த தகவல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த உயிரிழப்புகளும் நேற்றைய உயிரிழப்பு எண்ணிக்கையுடன் சேர்க்கப்பட்டது.

இதனால்,  இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட 2,197 உயிரிழப்புகளுடன் பீகார் அளித்த 3,951 உயிரிழப்பு எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டு, புதிய உச்சமாக 6,148 பேர் (2,197 + 3,951) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது என விளக்கம் தெரிவித்து உள்ளது.