சென்னை: கழகத்தின் மாவீரன், என் நெஞ்சம் நிறைந்த அன்பு உடன்பிறப்பாம் ஜெ.அன்பழகனை நாம் பிரிந்து ஓராண்டாகிறது. அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும்! மக்கள் நலன் காத்த மகத்தான தொண்டரான அவரது கனவுகளை கழக அரசின் வழியாக நிறைவேற்றி என்றென்றும் அவர் நினைவைப் போற்றுவோம்  என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜெ.அன்பழகன் மறைந்து இன்றோரு ஒராண்டு நினைவுபெறுகிறது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பின்போது, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஓடி ஓடி அயராது உழைத்த மாவீரன்,  கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவ திமுக அறிவித்த ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை, சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் என்ற முறையில் முன்னின்று செயல்படுத்தி வந்தவர் ஜெ. அன்பழகன் அதே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு   ஜூன் 2ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஜூன் 10ந்தேதி உயிரிழந்தார்.  இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்த முதல் எம்எல்ஏ ஜெ அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கத. அவரது முதலாண்டு நினைவு நாள் இன்று திமுகவினரால் அனுசரிக்கப்படுகிறது.

ஜெ.அன்பழகன் மறைந்து ஓராண்டு ஆன நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், விடுத்துள்ள பதிவில் “கழகத்தின் மாவீரன், என் நெஞ்சம் நிறைந்த அன்பு உடன்பிறப்பாம், ஜெ.அன்பழகனை நாம் பிரிந்து ஓராண்டாகிறது. அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும்! மக்கள் நலன் காத்த மகத்தான தொண்டரான அவரது கனவுகளை கழக அரசின் வழியாக நிறைவேற்றி என்றென்றும் அவர் நினைவைப் போற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

மறைந்த ஜெ.அன்பழகன்  கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக தென் சென்னை மாவட்டச் செயலாளராக பதவி வகித்தவர். 2001, 2011 மற்றும் 2016 என மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தவர். சட்டப்பேரவை விவாதத்தின் போது எதற்கு அஞ்சாமல் துணிச்சலாக தனது வாதங்களை எடுத்து வைப்பதில் அவருக்கு நிகர் அவரே என்பது குறிப்பிடத்தக்கது.