சென்னை; ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அறிக்கையை அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து நடவடிக்கை முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 600 பக்க அறிக்கையை சமர்ப்பித்தார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் சந்தித்து விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழங்கினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5.12.2010 அன்று காலமானது குறித்து விசாரிப்பதற்காக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 25.09.2017 அன்று ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் கால வாம்பு 24.08.2022 அன்று முடிவுற்ற நிலை யில், இன்று முதலமைச்சர் அவர்களிடம் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையை வழங்கினார்.

நீதியரசர் ஆறுமுகசாமி வழங்கிய ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை வரும் 29 அன்று நடைபெற இருக்கின்ற அமைச்சரவைக் கூட்டத்தில் (Cabinet Meeting) ஒரு பொருண்மையாக வைக்கப்பட்டு விவாதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த நிகழ்வின் போது, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.