சென்னை: வீட்டில் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு லைசென்ஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ள சென்னை மாநகராட்சி, செல்லப்பிராணி களுக்கு நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பான சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பெரும்பாலான மக்கள் செல்ல பிராணிகளான நாய், பூனை, பறவை இனங்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் வளர்த்து வருகின்றனர். செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்க மாநகராட்சி சார்பில் 4 இடங்களில் (மண்டலம் 6, 9, 12, 141) சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை என்ற இலக்கினை அடையும் பொருட்டு இம்மையங்களில் அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முற்றிலும் இலவசமாக செலுத்தப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி விதிகளின்படி செல்லப்பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

இதற்கென இம்மையங்களில் – செல்லப்பிராணிகளுக்கான உரிமம் ரூ.50 கட்டணத்தில் வருடத்துக்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் வழங்கப்படுகின்றது.

இந்த சேவையை முழுமையாக பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.