டெல்லி:  அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீடு உள்பட அவருக்கு சொந்த இடங்களில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என பல துறைகள் அடுத்தடுத்து சோதனைகளை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி உள்ளது. இதையடுத்து அவரது வீட்டில் மீண்டும் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, சோதனை முடிந்ததும், அவரை கைது செய்தது. இதையடுத்து, அவர் நெஞ்சுவலிப்பதாக கூறி,  அரசு மற்றும் நீதிமன்ற ஆதரவுடன் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்றார்.  தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது இலாக்காக்களை பறித்த திமுக அரசு, அவரது அமைச்சர் பதவியை நீக்காமல் வசதியாக வைத்துள்து.

இதற்கிடையில், செந்தில்பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதி நிஷா பானு, அமலாக்கத்துறை கைது செய்ய உரிமை இல்லை என கூறிய நிலையில், மற்ற நீதிபதிகள், அமலாக்கத்துறைக்கு கைது செய்ய உரிமை உண்டு என கூறினர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில்,  செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் தள்ளுபடி செய்வதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுடன்,  செந்தில்பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த வழக்கை நீதிபதி போபண்ணா மற்றும் நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் அமர்வு விசாரணை நடத்தி வந்த நிலையில்,  செந்தில் பாலாஜியை கைது செய்த அமலாக்கத்துறை நடவடிக்கை சரி  என்றும், அவரிடம் விசாரணை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 12ம் தேதி வரை செந்தில்பாலாஜியை அமலக்கத்துறை காவலில் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது.

மேலும்,  கைது செய்யப்பட்டதில் இருந்து 15 நாட்கள் கடந்தபின் அமலாக்கத்துறையினரால் ஒருவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா என்ற விவகாரத்தை மட்டும் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றியது உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முக்கிய சட்ட சிக்கல் எழுந்த நிலையில் அரசியல் சாசனம் அமர்வு விசாரிக்க உள்ளது

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு திமுகவினருக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு  பெரும் பின்னடைவாக  அமைந்துள்ளது.