புதுடெல்லி: உச்சநீதிமன்ற பதிவகத்தில் மோசடிகள் நடைபெறாமல் கண்காணிக்க, சிபிஐ உதவியை நாடியுள்ளது உச்சநீதிமன்றம்.

சிபிஐ அமைப்பு மற்றும் டெல்லி காவல் துறையில், மூத்த காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் நிலையிலுள்ள அதிகாரிகளை இப்பணியில் ஈடுபடுமாறு ஆணையிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

ஏனெனில், சில குறிப்பிட்ட வகையான வழக்குகள், சில குறிப்பிட்ட அமர்வுகளுக்கே ஒதுக்கப்படுவது குறித்து பல உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களின் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், நிதி மோசடி வழக்கில் அனில் அம்பானி உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதை தடுக்கும் வகையில் தீர்ப்பில் திருத்தம் செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது. பின்னர், சம்பந்தப்பட்ட ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே காவல்துறை அதிகாரிகள் பதிவகத்தின் ஒரு அங்கமாக செயல்படவுள்ளது இதுதான் முதன்முறை. இவர்கள் டெபுடேஷன் அடிப்படையில் பணியாற்றவுள்ளனர். இவர்கள் கூடுதல் பதிவாளர், உதவி பதிவாளர், கிளை அதிகாரிகள் மற்றும் மூத்த நீதிமன்ற உதவியாளர்கள் என்ற பணிநிலைகளில் வைக்கப்படுவார்கள்.