அமராவதி;

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், அவசர மருத்துவ வசதிகளை கருத்தில்கொண்டு,  மருத்துவ போக்குவரத்துக்கு ஓலா (OLA)  வண்டிகளை  இயக்க ஆந்திர அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. விசாகப்பட்டினத்தில் பைலட் திட்டத்தை தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக டயாலிசிஸ், புற்றுநோய், இதயநோய் போன்ற  தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட வர்கள், தொடர் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக ஏராளமானோர் மத்தியமாநில அரசுக்கு வாகனங்கள் அனுமதிக்க கோரியும் அல்லது, ஆம்புலன்ஸ் வழங்கிக்கோரியும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆந்திரா அரசு,  டயாலிசிஸ், புற்றுநோய், இதய நோய் போன்ற அவசர மருத்துவ பராமரிப்புக்காக ஓலா நிறுவனத்தின் வண்டிகளை இயக்க அனுமதி வழங்கி உள்ளது.  மருத்துவ அவசரநிலைகளுக்கு மட்டுமே இயக்கும் வகையில் ஓலா நிறுவனத்துடன் (COVID-19 அல்லாத) ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த பைலட் திட்டத்தை விசாகப்பட்டினத்தில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வசதியை நோயாளிகள் மட்டுமின்றி மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களும் பணிக்கு செல்வதற்கும், வீடு திரும்புவர்களுக்கும்  பயன்படுத்தலாம்,

இந்த வாகனங்களில் செல்ல 2 பேருக்கு மட்டுமே அனுமதி. காரினுள்ளும் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.

வாடிக்கையாளர்கள் சானிடிசர்கள் மற்றும் முகமூடிகளை பயன்படுத்த வேண்டும்.

வண்டியை முறையான இடைவெளியில் தூய்மைப்படுத்த வேண்டும்.

பயணிகள் பாதுகாப்பு என்பது OLA வண்டிகளின் பொறுப்பு என்ற நிபந்தனைகளுடன் ஆந்திர அரசு இயக்க அனுமதி வழங்கி உள்ளது.

இதுபோல மருத்துவ உதவிக்காக ஓலா வண்டிகளை இயக்க கர்நாடக அரசும் அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசும் இதுபோன்று ஓலா வண்டிகளை இயக்க அனுமதி வழங்குமா என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்..