டில்லி

செயல்படாத நிறுவனங்களை கண்டறியும் படிவ நடவடிக்கை நடைமுறைக்கு ஒத்து வராது என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஷெல் நிறுவனங்கள் என அழைக்கப்படும் செயல்படாத நிறுவனங்கள் இல்லாத ஒரு முகவரியில் இருந்து இயங்குவதாக கணக்கு காட்டப்படுபவை ஆகும்.   இந்த நிறுவனங்கள் பொதுவாக கறுப்புப் பண பரிவர்த்தனைக்காக நடத்தப்படுபவை ஆகும்.  இந்த நிறுவனங்களை கண்டறிய அரசு ஐஎன்சி 22 என்னும் படிவத்தை அறிமுகம் செய்துள்ளது.

அனைத்து நிறுவனங்களும் இந்த படிவத்தை ஆன்லைன் மூலம் சமர்பிக்க வேண்டியது கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது.   இதன் மூலம் செயல்படாத் போலி நிறுவனங்களை தடை செய்ய முடியும் என்னும் எண்ணத்தில் இந்த படிவம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.   இந்த படிவத்தின் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இருக்கும் இடத்தை குறிப்பிட வேண்டும்.

அத்துடன் தலைமை அலுவலகத்தின் வெளிப்புறம்  மற்றும் உட்புற புகைப்படங்களையும் பதிய வேண்டும்.   அந்த புகைப்படங்களில் நிறுவன தலைமை அதிகாரி மற்றும் இயக்குனர்கள் இடம் பெற வேண்டும்.   தலைமை அலுவலக இருப்பிடத்தை அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகையுடன் அளிக்க வேண்டும்.   இவ்வாறாக விதிமுறைகள் உள்ளன.

இது குறித்து அரசு அதிகாரி ஒருவர், “இந்த விதிமுறைகளின்படி இதுவரை மிகவும் குறைந்த அளவில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.   பெரிய நிறுவன இயக்குனர்கள் பலர் அலுவலகத்துக்கு வந்து பணிபுரிவதில்லை.  பெரும்பாலும் அவர்கள் சுற்றுப்பயணத்தில் இருப்பது வழக்கமாகும்.  இதனால் சுமார் 10 – 12 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   இந்த படிவம் நடைமுறைக்கு ஒத்து வராது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கேபிஎம்ஜி நிறுவன தலைவர் வெங்கடேஸ்வரன், “ஷெல் நிறுவனங்களை கண்டறிய இந்த படிவம் அவசியமானது என்பதில் ஐயமில்லை.   ஆனால் அதே நேரத்தில் பல செயல்படும் நிறுவனங்களாலும் இந்த படிவத்தில் காணும் அனைத்து விவரங்களையும் ஒரே நேரத்தில் அளிக்க முடியாமல் உள்ளது.   இதனால் பல நிறுவனங்களால் இந்த படிவத்தை அளிக்க முடியாத நிலை உள்ளது” என கூறி உள்ளார்.

இது குறித்து நிறுவன விவகார அமைச்சகத்துக்கு ஏராளமான கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.   ஆயினும் அமைச்சகம் இந்த படிவம் அவசியம் அளித்தாக வேண்டும் என கூறி உள்ளது.   அத்துடன் இந்த படிவம் அளிக்காத புகழ் பெற்ற நிறுவனங்களும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரும் என அமைச்சகம் எச்சரித்துள்ளது.