சென்னை:  அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது சரியே என  மீண்டும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர் பாஜகவின் அறிவுரையின்பேரில் உடைந்த இரு பிரிவுகளும் இணைந்து ஆட்சியை நடத்தி வந்தன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து கட்சியை வழிநடத்தி வந்தனர்.

இதனிடையே 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு  கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒற்றைத் தலைமை வேண்டுமென்ற முழக்கம் அதிமுகவில் வலுவாக எழுந்தது. பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக தேர்வாக விரும்பினர்.

இதுதொடர்பாக அதிமுக  பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழுவுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவரை நோக்கி பாட்டில்கள் வீசப்பட்டன. இதனையடுத்து அதிமுக பொதுக்குழு ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி தலைமையில் மீண்டும் கூடியது.  இதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டும், பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கப்படுவதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிட்டது நீதிமன்றம். எனினும் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியது.

இதன் தொடர்ச்சியாக அதிமுகவிலிருந்து தங்களை நீக்கம் செய்தது உள்ளிட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக மனுதாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரும் இரு நீதிபதிகள் அமர்வில் முறையீடு செய்தனர்.

இந்த மனுக்கள் மீது உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வு விசாரித்த வந்தது.  இவ்வழக்கில் மொத்தமாக ஏழு நாட்கள் வாதம் நடைபெற்றது. அத்துடன், இரண்டு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. விசாரணை முடிந்து கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில்  இன்று அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு  தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில்,  அதிமுக  பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தெரிவிக்கப்பட்டு,  ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஏற்கனவே இந்த வழக்கில், பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் தீர்மானங்கள் மீது தடை விதிக்க முடியாது. ஒருவேளை தடை விதித்தால் அது கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பாக இருக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் ஓபிஎஸ்-க்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடிக்கு மேலும் வெற்றியை கொடுத்துள்ளது. இதன் காரணமாக, சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவகத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்” அதிமுக பலமாக இருக்கிறது  என தெரிவித்தார்.