ஐதராபாத்:

ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள அமத்தகுர் என்ற பகுதி மிகவும் பின் தங்கிய பகுதியாகும். இங்கு பெரும்பாலும் ஏழை எளிய மக்களே வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் இந்து என்ற 10 வயது மாணவி 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

தலித் குடும்பத்தை சேர்ந்த இந்த சிறுமிக்கு வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் ஹிந்து என்று பெயர் அச்சிட்டு வழங்கப்பட்டது. அவரது பெற்றோர் திருத்ததுடன் புதிய ஆதார் அட்டை பெற விண்ணப்பித்தனர். திருத்தம் மேற்கொண்டு இரண்டாவதாக வழங்கப்பட்ட ஆதார் அட்டையிலும் ஹிந்து என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அந்த சிறுமி கல்வி உதவித் தொகை வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த மேலும் 4 தலித் சிறுமிகள், ஒரு இஸ்லாமிய சிறுமிக்குகம் ஆதார் பெயர் குளறுபடியால் உதவித் தொகை பெற முடியாத நிலை உள்ளது.

ஆந்திராவில் எஸ்சி, எஸ்டி, பிசி ஆகிய பிரிவு மாணவ மாணவிகளுககு ஆண்டுதோறும் ஆயிரத்து 200 ரூபாய் கல்வி உதவித் தொகையாக அரசு வழங்குகிறது. இந்த தொகை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதற்கு மாணவ மாணவிகள் வங்கி கணக்கு தொடங்க வேண்டும். வங்கி கணக்கு தொடங்க ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆதாரில் அச்சிடப்பட்டுள்ள பெயரில் குளறுபடி இருப்பதால் வங்கி கணக்கு தொடங்க முடியாமல் உள்ளது. இந்த பள்ளியில் மொத்தம் 21 பேருக்கு உதவித் தொகை பெற தகுதியுள்ளனர். வரும் பிப்ரவரியில் உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

ஆனால் இந்த 5 மாணவ மாணவிகளுக்கு மட்டும் வங்கி கணக்கு இன்னும் தொடங்கப்படவில்லை. இவர்களின் பெற்றோர் விவசாய கூலித் தொழிலாளிகள். மேலும், இவர்கள் சமீபத்தில் பணிக்காக பெங்களூருக்கு இடம்பெயர்ந்துள்ளனர். அதனால் இந்து உள்பட 4 மாணவ மாணவிகள் உதவித் தொகை பெற அரசு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.