கான்பூர்:

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து தேசிய புலனாய்வு பிரிவு, ரிசர்வ் வங்கி, வருமான வரித் துறை அதிகாரிகள், போலீசார் உ.பி.மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினர்.

அங்கு பிடிபட்ட சிலரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் கான்பூரில் உள்ள அவர்களது வீடுகளில் சோதனை நடந்தது. அப்போது பழைய ரூபாய் நோட்டுக்களை அடுக்கி ஒரு படுக்கை ஏற்படுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அதை கைப்பற்றி ரூபாய் நோட்டுக்களை எண்ண தொடங்கினர். இதில் சுமார் ரூ. 100 கோடி வரை இருந்துள்ளது.

புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்றி தருகிறோம் என்று மக்களிடம் வசூல் செய்யப்பட்ட மோசடி பணமாக இது இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். இந்த பணத்தை புதிய ரூபாய் நோட் டுக்களாக மாற்றி தர சிலர் உறுதியளித்துள்ளனர். அதன் அடிப்படையில் தான் இது பதுக்கி வைக்கப்பட் டுள்ளது. அதனால் மாற்றி தருவதாக உறுதியளித்தவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதில் பிடிபட்ட ஒரு நபர் டில்லியில் சிலருடன் தொடர்பில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் அரசு அதிகாரிகள் தலையீடு எதுவும் இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதோடு வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் வந்த உண்டியல் பணமாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இத தாடர்பாக பறிமுதல் செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2016ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த உயர் மதிப்புடைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 1,716.5 கோடி 500 ரூபாய் நோட்டுக்கள், 685.8 கோடி 1000 நோட்டுக்கள் என ரூ. 15.44 லட்சம் கோடி மதிப்பிலான பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்டது.

ரிசர்வ் வங்கி 2016-17ம் ஆண்டுக்கான ஆண்டறிகையை வெளியிட்ட போது மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவிதம் அதாவது ரூ. 15.28 லட்சம் கோடி வங்கிக்கு திரும்பி வந்துவிட்டது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.