ட்ச்

குஜராத்தில் பிபோர்ஜாய் புயல் பாதிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் ஆய்வு செய்துள்ளார்.

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே கரையைக் கடந்தது. மாலை 6.30 மணிக்கு புயல் கரையை கடக்க தொடங்கி அதிகாலை 2.30 மணி வரை நீடித்தது.

இதனால் 140 கிமீ வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்று மற்றும் மழையால், கட்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் பல மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தேசிய மீட்பு படை மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் இருந்து இரவோடு இரவாக புயலில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. சுமார் 4,600 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், 3,580 கிராமங்களில் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும் இன்னும் 1,000 கிராமங்கள் இருளில் மூழ்கி இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் கூறி உள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை விரைந்து வழங்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

பிபோர்ஜாய் புயலின் பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார்.  அமித்ஷா குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஹெலிகாப்டர் மூலம் குஜராத் முதலமைச்சருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் கட்ச் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரை அமித்ஷா சந்தித்துப் பேசினார். அவர் மாண்ட்வி சிவில் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.