டில்லி
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2029 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.
மத்திய அரசு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சாசன திருத்த மசோதா ஒன்றை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. மசோதா மீது விரிவான விவாதம் நடந்து இதில் பேசிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மகளிருக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,
“மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுவது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. சமீபத்திய ஜி-20 உச்சி மாநாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வையை பிரதமர் மோடியும் முன்வைத்தார்.
அரசுக்குப் பெண்களின் பாதுகாப்பு, மரியாதை, சமபங்களிப்பு போன்றவை உயிர் நாடியாகும். பாஜக அரசு ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும் என்ற அச்சம் தேவையற்றது. நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் அடுத்து வரும் அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைகளை உடடினயாக மேற்கொள்ளும்.
அதன் பிறகே மக்களவை மற்றும் மாநிலச் சட்டசபைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதற்கான செயல்முறையை நடைமுறைப்படுத்தும். எனவே வரும் 2029-ம் ஆண்டுப்பிறகு மகளிர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்.”
என்று கூறினார்.