போபால்

கொரோனா பரவுதல் கடுமையாக உள்ள நேரத்தில் மத்தியப் பிரதேச பாஜக அரசில் 5 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வந்தது.  காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.  இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.  அதன்பிறகு பாஜகவின் சிவராஜ்சிங் சவுகான் மார்ச் 23 ஆம் தேதி அன்று இரவு முதல்வராகப் பதவி ஏற்றார்.

அடுத்த நாள் முதல் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் வேறு எந்த அமைச்சரும் பதவி ஏற்கவில்லை.  அனைத்து பணிகளையும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கவனித்து வந்தார்.

மத்தியப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உயிரிழப்புகளும் அதிக அளவில் நிகழ்கின்றன.  மாநில அரசில் சுகாதார அமைச்சர் என யாரும் இல்லாததால் இதைக் கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது.  இது குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய போது கொரோனா தாக்கம் காரணமாக அமைச்சர்கள் பதவி ஏற்கவில்லை என பாஜக காரணம் கூறியது.

கொரோனா தாக்கம் இன்னும் குறையாத நிலையில் மபி மாநில அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு நேற்று 5 அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர்.  பாஜக தலைவர்களான நரோத்தம் மிஸ்ரா, கமல் படேல், மீனா சிங், துளசி சிலவத், மற்றும் கோவிந்த் சிங் ராஜ்புத் ஆகியோருக்கு போபாலில் நடந்த விழாவில் ஆளுநர் லால்ஜி டண்டன் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.