மேதி

த்திய அரசு காப்பீட்டு திட்டத்தில் உள்ளவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கவில்லை என அமேதி சஞ்சய் காந்தி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் என்னும் காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது.   இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மருத்துவமனைகளிலும் ஒரு குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.   இதில் நாட்டு மக்களில் பெரும்பாலோனோர் இணைக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான அமேதியில் சஞ்சய் காந்தி மருத்துவமனை என ஒரு மருத்துவமனை அமைந்துள்ளது.  இந்த மருத்துவமனையின் தாளாளர்களில் (TRUSTEE)  ராகுல் காந்தி யும் ஒருவர் ஆவார்.   தற்போதைய மக்களவை தேர்தலில் இந்த மருத்துவமனை அமைந்துள்ள அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி போட்டியிட்டு வருகிறார்.

அமைச்சர் ஸ்மிரிதி தனது டிவிட்டரில், “சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஒரு நோயாளி சென்றுள்ளார்.   அவர் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டின் கீழ் உள்ளவர் என்பதால் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டுள்ளது.   மருத்துவமனை அதிகாரிகள் இந்த மருத்துவமனை மோடிக்கோ யோகிக்கோ சொந்தமானது இல்லை எனவும் ராகுல் காந்திக்கு சொந்தமானது எனவும் கூறி உள்ளனர்” என பதிந்தார்.

அத்துடன் அவர் அந்த நோயாளியின் உறவினர் என தன்னை சொல்லிக் கொள்பவரின் வீடியோவையும் பகிர்ந்தார்.   அதில் அந்த உறவினர் தமது மாமாவுக்கு இவ்வாறு கூறி சிகிச்சை அளிக்க மருத்துவமனை மறுத்து அவரை வெளியேற்றி விட்டதாகவும் அந்த நோயாளி கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி மரணம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடந்த  ஒரு பாஜக தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி, “அமேதியில் ஒரு மருத்துவமனை உள்ளது.   அதன் தாளாளராக நாட்டின் புகழ் பெற்ற குடும்பத்தின் உறுப்பினர் இருக்கிறார்.   இங்கு ஒரு ஏழை தனது சிகிச்சைக்காக ஆயுஷ்மான் பாரத் அட்டையுடன் சென்றுள்ளார்.  அவர் எனது அரசின் காப்பிட்டின் கீழ் அவர் வருகிறார் என்பதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை மறுத்துள்ளது ” என பேசி உள்ளார்.

சஞ்சய் காந்தி மருத்துவமனை நிர்வாகம் இதை மறுத்துள்ளது.   நேற்று அந்த மருத்துவமனையின் இயக்குனர் சவுத்ரி, “இது ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும்.  இதுவரை இந்த திட்டத்தின் கீழ் நாங்கள் 200 பேருக்கு சிகிச்சை அளித்துள்ளோம்.    ராகுல் காந்தியின் புகழை கெடுக்க இவ்வாறு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி மற்றும் பிரதமர் மோடி பொய் புகார் தெரிவித்துள்ளனர்” என கூறி உள்ளார்.