டெல்லி: அமேசான் நிறுவனத்துக்கு ரூ.202 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதுடன், அதன் சில்லறை விற்பனை ஒப்பந்தத்தை சஸ்பெண்டு செய்தும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

சில்லறை விற்பனையாளர் பியூச்சர் கூப்பன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பங்குகளை வாங்குவதற்கான அமேசானின் ஒப்பந்தத்திற்கு இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ – The Competition Commission of India (CCI) வெள்ளிக்கிழமை தனது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான ஒப்புதலை நிறுத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளது. மேலும்,  உண்மைகளை மறைத்ததற்காக ஈ-காமர்ஸ் மேஜருக்கு ₹ 202 கோடி அபராதம் விதித்தது.

அமேசான் நிறுவனம் சில்லரை விற்பனையில் நுழையும் வகையில், ஃப்யூச்சா் கூப்பன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்க அந்த நிறுவனத்துடன் அமேசான் ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் சிசிஐ ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்பந்தத்தின்போது அமேசான் நிறுவனம் சில தகவல்களை மறைத்து, இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களை மீறியதாக கடந்த மாா்ச் மாதம் ஃப்யூச்சா் கூப்பன்ஸ் நிறுவனம் சிசிஐயிடம் புகாா் அளித்தது.

இந்தப் புகாரை விசாரித்து வந்த, நேற்று அதற்கான உத்தரவை வெளியிட்டுஉள்ளது.  சிசிஐ வெளியிட்டுள்ள 57 பக்க உத்தரவில்,  2019 இல் ஒழுங்குமுறை அனுமதிகளை கோரும் போது தவறான அறிக்கைகளை அமேஷான் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும்,  இதனால்  அமேசான்-பியூச்சர் கூப்பன்கள் ஒப்பந்தத்திற்கான ஒப்புதல் “நிறுத்தப்பட்ட நிலையில் இருக்கும்” என்று  தெரிவித்துஉள்ளது.

ஃப்யூச்சா் கூப்பன்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நோக்கத்தை மட்டுப்படுத்த வேண்டுமென்றே செயல்பட்டுள்ளதன் மூலம், சில விதிமுறைகளை அமேசான் நிறுவனம் மீறியுள்ளது.

இதற்காக அந்த நிறுவனத்துக்கு மொத்தம் ரூ.202 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது.  அந்த நிறுவனம் ஃப்யூச்சா் கூப்பன்ஸ் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்துக்கும் தற்காலிகமாகத் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனத்துடனான ₹ 24,713 கோடி ஒப்பந்தம் தொடர்பாக அமேசான் மற்றும் ஃபியூச்சர் குழுமத்திற்கு இடையே கடுமையான சட்டப் போருக்கு மத்தியில் இந்த உத்தரவு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.