சென்னை

இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடுவதை ஒட்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்கள் இன்று தமிழ்ப்புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.   தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  பிரதமர் மோடி,  தமிழக முதல்வர் பழனிச்சாமி  தமிழக ஆளுநர் பன்வாரிலால்,  உள்ளிட்ட பல தலைவர்கள் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டிவிட்டரில் பிரதமர் மோடி தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் என பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் புத்தாண்டில் தமிழ் மக்களின் ஆசைகள் நிறைவேற்றப்படும் எனவும் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி தனது டிவிட்டரில் தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என மேலும் பதிந்துள்ளார்.

மேலும் வாழ்த்து தெரிவித்தோர் விவரம் வருமாறு

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: தமிழ் புத்தாண்டு, நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் மேம்பட்ட நிலையின் அடையாளமாக திகழ்கிறது. தமிழர்கள் அன்பு, இரக்கம் , வீரம், ஓழுக்கத்துடன் திகழ்பவர்களாக உலகம் முழுவதும் அறியப்படுகிறார்கள். இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ இந்த நாள் உதயமாகட்டும்.

முதல்வர் கே.பழனிசாமி: ஈடில்லா பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட தமிழ் பெருமக்கள், சித்திரை திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக பன்னெடுங்காலமாக கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்த இனிய புத்தாண்டு, தமிழர்களின் வாழ்வில் புதிய எழுச்சியையும் வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும். தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழர்கள் வாழ்வில் வளமும், நலமும் ஏற்பட வேண்டுமானால் மக்கள் நலன் சார்ந்த ஆட்சிகள் அமைய வேண்டும் . இதனை மனதில் கொண்டு வாக்களிக்க தமிழ் புத்தாண்டில் சூளுரை மேற்கொள்வோம்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடங்குவதன் அடையாளம்தான் சித்திரை முதல் நாளாகும். தமிழகத்திலும் அனைத்திந்திய அளவிலும் ஒரு பெரிய மாற்றத்துக்கு கட்டியம் கூறுகின்ற வகையில் இந்த ஆண்டு சித்திரை திங்கள் மலர்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ்: உணவு படைக்கும் கடவுளரான உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டும் என்று இந்நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி : சித்திரை திருநாள் நமக்கு வசந்ததை மட்டுமின்றி வாழ்க்கை நெறிகளையும் போதிக்கும் பயனுள்ள திருவிழாவாகும். சித்திரை திருநாள் தமிழக மக்களின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழக மக்கள் வாழ்வில் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் பொங்க உழைக்க உறுதியேற்போம்.

அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தமிழ் புத்தாண்டில் உண்மையான வசந்தமும், மகிழ்ச்சியான வாழ்வும் தமிழ் சமூகத்துக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை வெளிச்சம் தெரிகிறது. இந்த மகிழ்ச்சியோடு ஒவ்வொரு தமிழரின் வீடுகளிலும் வசந்த மலர் பூத்திட, தமிழ் புத்தாண்டை வரவேற்போம்.

சமக தலைவர் ஆர்.சரத்குமார்: தமிழர்களின் உணர்வை புதுப்பிக்கும் புத்தாண்டாய் இவ்வினிய தமிழ் புத்தாண்டு மலரவும், சமத்துவம் சகோதாரத்துவம் தழைக்கவும், எல்லா நலமும், வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும்.

இவர்களுடன் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் பாரிவேந்தர், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன் உள்ளிட்டோரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.