நேற்று நடந்த முரசொலி பவள விழாவில் கமல் பேச்சு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. முதல் விசயம், “முட்டாள் என்று கமல் குறிப்பிட்டது ரஜினியையா” என்பது. ( அது குறித்து தனி செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.)

அடுத்த சர்ச்சை, “தற்காப்பைவிட தன்மானமே பெரியது..  என்று கமல் பேசியிருக்கிறாரே.. அப்படிப் பேச அவருக்குத் தகுதி உண்டா?“  என்ற கேள்வியுடன் ஒரு ஒளிப்படத்தையும் நெட்டிசன்கள் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.

2010ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடந்த பாராட்டு விழா ஒன்றில், எடுக்கப்பட்ட ஒளிப்படம். அதில் ரஜினி கமல் அஜீத் இருக்கிறார்கள்.

அப்படி என்ன விசேசம் அந்த படத்துக்கு?

2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சிகாலத்தில், அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு அவ்வப்போது பாராட்டு விழாக்கள் நடப்பது வழக்கம். இப்படி பாராட்டு விழாக்கள் நடத்துவதில் திரைத்துறையினருக்கு முக்கிய பங்கு உண்டு.

அப்படி ஒரு பாராட்டு விழாவில் எடுக்கப்பட்டதுதான் அந்த ஒளிப்படம்.

2010ல் அஜீத் பேச… கை தட்டும் ரஜினி பார்த்துக்கொண்டிருக்கும் கமல்

அதாவது, திரைப்படத்துறையைச்சார்ந்த நலிந்த கலைஞர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள சென்னை பையனூருக்கு அருகில் 90 ஏக்கர் நிலத்தை அப்போதைய தி.மு.க. அரசு  ஒதுக்கியது. அதற்கு நன்றி தெரிவித்து ( அப்போதைய) முதல்வர் கருணாநிதிக்கு “பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா”  என்ற பெயரில் திரைப்படத்துறையின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. நடந்தது, 2010 பிப்ரவரி 6 அன்று.

சென்னையில் நடந்த இந்த விழாவில் தமிழ்த் திரைப்பட நடிகர்கள் மட்டுமின்றி, இந்தி நடிகரான அமிதாப் பச்சனும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

நடிகர், நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள்.. அதான் ஆடல், பாடல் எல்லாம் நடந்தது. அதோடு, “ராஜாராணி” படத்தில் கருணாநிதி  வசனத்தை சிவாஜி பேசும் காட்சிகள் திரையிடப்பட்டன.  அதைப் பார்த்த கருணாநிதி கண்ணீர்விட, நடிகர்கள் ரஜினி, கமல், பிரபு ஆகியோரும் கண்கலங்கியதும் நடந்தது.

கண்ணீர்க் காட்சிக்குப் பிறகு ஒரு அதிரடி காட்சி வரும் அல்லவா… அப்படித்தான் இருந்தது அஜீத்தின் பேச்சு.

அவர் கருணாநிதியைப் பார்த்து  “அய்யா… கொஞ்ச நாட்களாக திரையுலகம் மீது உங்களுக்கு கோபம் இருக்கலாம். ஒவ்வொரு மக்கள் பிரச்சினைகளின் போதும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் முன்பு திரையுலகில் பொறுப்பில் இருக்கும் சிலர் அறிக்கை விடுவதும், ஊர்வலம் நடத்துவதும் எந்த வகையில் நியாயம்?

அந்த நிகழ்ச்சிகளுக்கு நடிகர், நடிகைகளை கட்டாயப்படுத்தி வரவழைக்கிறார்கள். அப்படி வராவிட்டால் மிரட்டுகிறார்கள். அல்லது தமிழன் இல்லையென்று பிரச்சாரம் செய்கிறார்கள். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் அய்யா.

எங்களுக்கு அரசியல் வேண்டாம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். அதற்கு முன்பு திரையுலகில் பொறுப்பில் உள்ள ஒரு சிலர் அறிக்கைவிடுவதை தடுக்க வேண்டும் அய்யா” என்று அஜீத் பேசினார்.

அதாவது குறிப்பிட்ட விழாவுக்கும், மிரட்டியே நடிகர் நடிகைகளை வரவழைத்திருக்கிறார்கள் என்பது போல் இருந்தது அவரது பேச்சு.

அஜித் பேசி முடித்தவுடன் கருணாநிதி அருகில் உட்கார்ந்திருந்த நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கரவொலி எழுப்பினார்.

இந்த ஒளிப்படத்தைப் பதிந்துதான், “அப்போது கமலுக்கு எங்கே போனது தன்மானம்” என்ற கேள்விகளையும் பதிவிட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள்.

கருணாநிதியை சந்தித்த அஜீத் (2010)

அப்போது கமல் அமைதியாக இருப்பது போல கமல் அமர்ந்திருப்பதைத்தான் விமர்சிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

சரி மீண்டும் பழைய கதைக்கு வருவோம்.

அஜீத்தின் பேச்சுக்கு அரசியலிலும், சினிமா வட்டாரத்திலும் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளும் கட்சியை எதிர்த்து பேசிவிட்டார் அல்லவா.. அதனால்தான் அத்தனை எதிர்ப்பு.

ராதாரவி, சரத்குமார் உள்ளிட்டோர் அஜீத்தை கடுமையாக பேசினர். . ஜாகுவார் தங்கம் என்ற ஸ்டன்ட் நடிகர் ரொம்ப ஓவராகவே பேசினார்.

அதாவது அஜீத் தனிமைப்டுத்தப்படுவது போன்ற சூழல் ஏற்பட்டது. அந்த சமயத்தில்தான் ரஜினியின் இரண்டாவது மகள், சௌந்தர்யா ரஜினியின் நிச்சயதார்த்தம் ஏற்பாடு ஆகியிருந்தது. அதற்கான அழைப்பிதழை கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று அளித்தார் ரஜினி. அப்போது கருணாநிதியிடம் அஜீத் விவகாரம் பற்றியும் கூறினார்.

இதையடுத்து கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு அஜீத்,  சென்றார்.  கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்திய அஜீத், அவர் காலைத் தொட்டு ஆசி பெற்றார். பின்னர் சுமார் 30 நிமிடம் முதல்வர் கருணாநிதியுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அஜீத் வந்திருக்கும் செய்தி பரவியதும் செய்தியாளர்கள் கூடிவிட்டனர். சந்திப்பு முடிந்து வெளியே வந்த நடிகர் அஜீத்திடம் சில கேள்விகளைக் கேட்டனர்.

கேள்வி: முதல்வர் கருணாநிதியை நீங்கள் திடீரென்று சந்தித்து பேசியிருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்?

அஜீத்: இது மரியாதை நிமிர்த்த சந்திப்பு அவ்வளவுதான்.

நேற்றைய முரசொலி பவள விழவில் ரஜினி – ஸ்டாலின் – கமல்

கேள்வி: முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் நீங்கள் தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி ஆதரவை தெரிவித்திருக்கிறாரே?

அஜீத்: இதற்காக அவருக்கு (ரஜினிகாந்த்) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி: விழாவில் நீங்கள் பரபரப்பாக பேசியதற்கு யாராவது தூண்டினார்களா?

அஜீத்: அப்படியெல்லாம் கிடையாது.

கேள்வி: நீங்கள் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?

பதில்: நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்…

சரி இறுதியாக முக்கிய விசயத்துக்கு வருவோம். “அந்த இக்கட்டான சூழலில் அஜீத்துக்கு கமல் ஏன் ஆதரவு அளிக்கவில்லை” என்பதுதான் தற்போது கமல் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.

ஆனால் அப்போது அஜீத்துக்கு கமலும் ஆதரவு தெரிவித்தார். ரஜினி போல எழுந்து நின்று கைதட்டவில்லையே தவிர, அஜீத் பேசியது சரிதான் என்று கமல் தெரிவித்தார்” என்கிறார்கள் கமலுக்கு நெருக்கமானவர்கள்.