“கலைஞர் தொலைக்காட்சியிலேயே கலைஞரை ஒதுக்குவதா..?” : கருணாநிதிக்கு அப்பாவி கலைஞனின் பகிரங்கக் கடிதம்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின்  பெயரால் இயங்கும் “கலைஞர்” தொலைக்காட்சியில், அவர்களது அனுமதியுடன் கருணாநிதியின் சிறுகதைகளை சின்னத்திரைப் படங்களாக இயக்கினார் ராஜகுமாரன்.  இவர், கருணாநிதியின் இள வயது நண்பர்களில் ஒருவரான கவிஞர் வ.கோ.  சண்முகத்தின் மகன்.

இதோ.. அவர்  கருணாநிதிக்கு எழுதும் பகிரங்கக் கடிதம்..

ராஜகுமாரன் – கருணாநிதி

“அன்பு அய்யா டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வணக்கம்.  விரைவில் நீங்கள் நலம் பெற்று நடமாட நீங்கள் நம்பாத – நான் நம்பும் இறையருளை இறைஞ்சுகிறேன்.

என் தந்தை கவிஞர் வ.கோ.சண்முகம் அவர்களுக்கும் உங்களுக்குமான நட்பு, திருவாரூரில் உங்களின் பள்ளிப் பருவத்தில் முகிழ்த்தது.  போர்டு ஸ்கூலில் இருவரும் ஒரு சாலை மாணாக்கர்.   இருவருமே தமிழை நேசித்தவர்கள்.  அதனால்தான் புலமைப் போட்டியால் நீங்கள், “மாணவர் பொழில்”  எனவும் அப்பா, “மாணவர் நேசன்” எனவும் போட்டிக் கையேட்டுப் பிரதிகள் நடத்தினீர்கள்.

அதே தமிழ்க்காதல்தான் பின்னாட்களில் உங்கள் இருவரையும் நண்பர்களாக்கியது. வசதியான குடும்ப வாழ்வு அப்பாவின் கால்களை திருவாரூரோடு முடக்கிப் போட்டது.  உங்களின் இறகுகள் இலக்கியம், திரைப்படம், அரசியல் என எல்லா திசையிலும் வெற்றிச் சிறகடித்தன.

நான் 12 வயது சிறுவனாக இருந்தபோது நிகழ்ந்த அந்தச் சம்பவம் இப்போதும் என் விழிகளில் நிழலாடுகிறது.

அது 70-களின் காலகட்டம்.  தேர்தல் பிரச்சாரத்துக்காக காரைக்கால் பகுதிக்கு வந்த நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்த என் அப்பாவைப் பார்க்க பிரச்சார ஊர்தியிலேயே என் அம்மாவின் ஊரான தலித் தெருவுக்கு வருகிறீர்கள்.

“எழுத்தாளர் ஏகலைவன்” படப்பிடிப்பில்..

என் அம்மா கையால் உணவருந்தி மந்திரி குமாரி, மருத நாட்டு இளவரிசி திரைப்படங்களின் வசனம் எழுதிய உங்களின் படைப்புக்களம் அந்த வீடுதான் என்பது உங்களுக்கும் அப்பாவுக்கும் என் அம்மாவுக்கும் மட்டும் தெரிந்த வரலாறு. நான் உங்களுக்கு மாலையிடுகிறேன்.  நோயால் உடல் நலிவுற்ற அப்பாவைப் பார்த்ததும் உங்கள் கண்கள் கலங்குகின்றன.  இருவரும் எதுவும் பேசவில்லைஅங்கிருந்து கோவை செல்லும் ரயிலில் நீங்கள் எழுதிய எக்ஸ்பிரஸ் கடிதம் மறுநாள் எங்கள் வீட்டுக்கு சிறப்புத் தபாலில் வருகிறது.

“பிஞ்சு எனக்கு மாலையிட்டபோது உங்களைப் பார்த்த என் நெஞ்சு பதறியது”  எனத் தொடங்கிய அந்த 16 பக்கக் கடிதம் முழுவதும் அப்பாவுக்கும் உங்களுக்குமான ஆழ்ந்த நட்பின் நினைவுகள்.  இறுதியாக, “தமிழக்கும், தமிழருக்கும், தமிழகத்துக்கும் நீங்கள் ஏதாவது செய்திட வேண்டுகிறேன்.  உங்கள் எழுத்தாற்றல் கொண்டு”  என அக்கடிதத்தை நீங்கள் நிறைவு செய்திருந்தீர்கள்.

சென்ற முறை தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது (2006) அப்பாவின் தமிழாற்றலையும், நட்பையும் போற்றும் வண்ணம் தமிழறிஞர் நூல்கள் நாட்டுடமைத் திட்டத்தின் கீழ் அப்பாவின் கவிதை நூல்களை நாட்டுடமை செய்து எனக்கும் என் தமக்கைக்கும் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பூதியம் அளித்ததை என்னால் என்று மறக்க முடியாது.

நிற்க… இது அப்பாவுக்கும் உங்களுக்குமான  நட்பின் முன் கதைச் சுருக்கம்.

மூன்றாண்டுகளுக்கு முன் ஒருநாள் உங்களின் சிறுகதை தொகுப்பு நூலில்,  குப்பைத் தொட்டி அணிற்குஞ்சு  சங்கிலிச் சாமியார் ஆகிய சில கதைகளை வாசித்தேன்.  ஒரு சிறுகதை ஆசிரியராக அதிகம் அறியப்படாத உங்களின் அந்த முகம் எனக்குள் பிரமிப்பை ஏற்படுத்தியது.  கலைஞரின் கதைநேரம் என்ற பெயரில் உங்களின் சிறுகதைகளை  தலா முப்பது நிமிட குறும்படத் தொடராக உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் அப்போது உதித்ததுதான்.  உடனே செயலில் இறங்கினேன்.  எழுத்தாளர் ஏகாம்பரம் என்ற உங்களின் சிறுகதையை அதில் உள்ள உரையாடல்களுடன் ஒரு அரைமணி நேர குறும்படத்துக்கு திரைக்கதை அமைத்து உங்களைச் சந்தித்தேன்.

“சங்கிலிச்சாமியார்”… ஒரு காட்சி..

என் மனைவி, மகளுடன் உங்களை அன்று சந்தித்தபோது திரு. ஆற்காடு வீராசாமி அவர்கள் திரு. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் திரு. தயாநிதி மாறன் ஆகியோர் உடனிருந்தனர்.  நீங்கள், “என் பால்ய நண்பர் வ.கோ.சண்முகத்தின் மகன் இவர். சண்முகம்  சிறந்த கவிஞர்.  தமிழறிஞர்”  என அவர்களிடம் பெருமிதத்துடன் என்னை அறிமுகம் செய்தீர்கள்.  அப்போதே உங்களின் சிறுகதைக்கான என் திரைக்கதையின் ஒளியச்சுப் பிரதியை பொறுமையாக வாசித்தீர்கள். “நல்லாருக்கு…  நான் என்ன செய்யணும்.  எனக்கு வசனம் எழுத நேரம் இல்லையே” என்றீர்கள்.

“நீங்கள் சிறுகதைகளில் ஏற்கனவே வசனங்களை எழுதிவைத்திருக்கிறீர்கள்”  என்றேன்.  சிரித்தபடி, “ நல்லா பண்ணு…  ரமேஷ் பிரபா கிட்ட சொல்றேன்” என்றீர்கள்.  மேலும், “அடுத்த முறை வரும்போது அப்பாவோட போட்டோவ எடுத்துட்டு வா.  அவரு முகம் பார்க்கணும் போல இருக்கு” என்று விடை கொடுத்தீர்கள் மகிழ்ச்சியாக.

மறுநாளே கலைஞர் தொலைக்காட்சியிலிருந்து எனக்கு அழைப்பு.  ரமேஷ் பிரபா அப்போது நிர்வாக இயக்குநர்.  பேச்சுவார்த்தை இறுதியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு படப்பிடிப்பைத் தொடங்கினேன்.

1. எழுத்தாளர் ஏகதலைவன்   2. குப்பைத் தொட்டி  3. அணில் குஞ்சு 4.சங்கிலிச் சாமியார் என இரண்டு மாதத்தில் நான்கு கதைகளை   குறும்படங்களாக்கி உங்கள் பார்வைக்கு வைத்தேன். எல்லாவற்றையும் பார்த்து ரசித்து பாராட்டினீர்கள். “ உடனே ஒளிபரப்பைத் தொடங்குங்கள்” என கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டீர்கள்.

அந்த காலகட்டத்தில்தான் ரமேஷ் பிரபா, நிர்வாக இயக்குநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றார்.  இயக்குநராக அமிர்தம் பொறுப்பேற்றார்.  அவரைச் சந்தித்து  உரையாடினேன். “விரைவில் உங்கள் தொடர் ஒளிபரப்பாகும்” என்றார்.

கவிஞர் வ.கோ.சண்முகம் நூல்கள் நாட்டுடமை- மரபுரிமை காசோலை பெற்ற போது..

ஆனால் எந்தத் தகவலும் இல்லை.

அதன் பிறகு உங்களைச் சந்திக்க பலமுறை முயன்றும் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  இன்றுவரை கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்தை பலமுறை தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தும் கலைஞரின் கதை நேரம் கை கூடி வரவி-ல்லை. ஒளிபரப்ப தயாராக இருந்தும், உங்களது படைப்பு முடங்கிக்கிடக்கிறது. காரணமும் தெரியவில்லை.

தற்போது அந்தத் தொடர்  ஒளிபரப்பானால் உங்களின் சிறுகதை ஆசிரியர் என்ற ஆற்றல் மிகு இலக்கிய முகம், தமிழ் கலை இலக்கிய உலகில் வியப்பை ஏற்படுத்தும்.  உங்களின் சிறுகதைகளை இயக்கியவன் என்ற பெரும்பேறு எனக்குக் கிடைக்கும்.

கலைஞர்  மீண்டும் நலம் திரும்பி நடமாட வேண்டும்.  என்பதும் கலைஞரின் கதை நேரம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வேண்டும் என்பதும் இன்றைய என் தொடர் பிரார்த்தனை.  நீங்கள் நம்பும் காலமோ, நான் நம்பும் கடவுளோ அந்த தங்க தருணத்தை சாத்தியமாக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

          உங்களின் அன்பு வாசகன், ரசிகன்

                                        எஸ்.ராஜகுமாரன்,

இயக்குநர்
English Summary
kalaignar-tv-avoid-kalaignar-the-innocent-artist-open-letter-to-karunanidhi