மும்பை:

அளவுக்கு மீறிய முடியாத கடன் சுமையாலும், நஷ்டத்தாலும் ஏர்செல் நிறுவனம் ‘திவால்’ நடவடிக்கைக்காக மனு தாக்கல் செய்திருக்கிறது.

 

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்று, ஏர்செல். இந்த நிறுவனம் பயன்படுத்தி வந்த செல்போன் கோபுரங்களுக்கு வாடகை பாக்கி வைத்ததால், சமீபத்தில் ஏர்செல் செல்போன் சேவை முடங்கியது.  மூன்று தினங்கள் பாதிப்புக்கு பிறகு, நிலைமை சீரானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏர்செல் நிறுவனம் ‘திவால்’ நடவடிக்கைக்காக, மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது.

இதுகுறித்து ஏர்செல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ஏர்செல் செல்லுலர், டிஷ்நெட் ஒயர்லெஸ், ஏர்செல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தொடர்பாக கார்ப்பரேட் திவால் தீர்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி, திவால் சட்டம் 2016–ன் 10–வது விதியின் கீழ், ஏர்செல் இயக்குனர்கள் குழு மனு தாக்கல் செய்துள்ளது.

புதிய நிறுவனம் ஒன்றின் வரவால் ஏற்பட்ட போட்டி, சட்டரீதியான சவால்கள், தாங்க முடியாத கடன் சுமை, அதிகரித்து வரும் இழப்புகள் ஆகியவற்றால் ஏர்செல் நிறுவனம் சிக்கலான தருணங்களை சந்தித்து வருகிறது. இதன் நற்பெயரும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஒயர்லெஸ் சேவையை வேறு ஒரு நிறுவனத்துடன் இணைக்கும் முயற்சி எந்த பலனையும் அளிக்கவில்லை. ஆகவே  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் அந்த முயற்சி முடிவடைந்தது.கடனை சீரமைப்பது தொடர்பாக, கடன் கொடுத்தவர்கள் மற்றும் பங்கு உரிமையாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.

ஆகவ, இந்த சூழ்நிலையில், திவால் சட்டத்தின் கீழ் தீர்வு காண்பதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று ஏர்செல் கருதுகிறது. இது, கடனை தட்டிக்கழிக்கும் நடவடிக்கை அல்ல. தற்போதைய சூழ்நிலையில், இதுதான் வர்த்தகர்கள், வினியோகஸ்தர்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் நன்மை தரும்  சிறப்பான தீர்வு ஆகும்.

அதே நேரம் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவையை வழங்க ஏர்செல் பாடுபடும். இந்த கடினமான தருணத்தில், வாடிக்கையாளர்களின் ஆதரவை கோருகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.