சென்னை: அதிமுக வெற்றிபெறும் என டெமாக்ரசி நெட்வொர்க் கருத்துக்கணிப்பு தெரிவிப்பதாக கூறிய அதிமுகவின் அண்டபுழுகு அம்பலமாகி உள்ளது. உண்மையான கருத்துக்கணிப்பை வெளியிடாமல் முறைகேடு செய்து அதிமுக வெற்றிபெற்றுள்ளதாக செய்திகளை அதிமுக தலைமை பரவ விட்டது தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல ஊடகங்கள், தன்னார்வ அமைப்புகள் மக்களின் மனநிலை குறித்து கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி இதுவரை வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுக வெற்றிபெறும் என்றே கூறி வருகின்றன.  ஆனால்,  டெமாக்ரசி நெட்வொர்க் மற்றும் உங்கள் குரல் ஆகிய அமைப்புகள் இணைந்து  நடத்திய கருத்துக் கணிப்பில் மட்டும், அதிமுக கூட்டணியே வெற்றிபெற்றதாக தகவல் வெளியானது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு டெமாக்ரசி நெட்வொர்க்  நடத்திய கருத்துக்கணிப்பு தொடர்பாக, அதிமுக ஆதரவு ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. அதல், தமிழகம் முழுவதும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாகவும், அதில்,  அதிமுக கூட்டணி 122 இடங்களிலும், திமுக கூட்டணி 111 இடங்களிலும், ஏனைய கூட்டணி ஓரிடத்திலும் வெல்லும் என தெரிவித்திருக்கிறது.

கொங்கு மண்டலம், தொண்டை மண்டலம், நடு மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய மண்டலம் என ஐந்து மண்டலங்களாகப் பிரித்து வாக்காளர்களிடம் கருத்துகணிப்பு நடத்தியதாகவும் , தமிழகஅரசு அறிவித்துள்ள பயிர் கடன் தள்ளுபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2,500 உள்ளிட்ட பல மக்கள் நலத்திட்டங்கள், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு, ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நிலையான ஆட்சி ஆகிய சாதகமான அம்சங்களால் அதிமுக கூட்டணிக்கு 122 இடங்கள் கிடைக்கக்கூடும் என்று தெரிவித்திருக்கிறது.

ஆனால், அந்த கருத்துக்கணிப்பு தவறானது என்பதும், அதில் அதிமுக தில்லுமுல்லு செய்துள்ளதும்  தெரிய வந்துள்ளது.

உண்மையில் டெமாக்ரசி நெட்வொர்க் நடத்திய கருத்துக்கணிப்பு என்ன என்பது குறித்து, அந்நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில்,  திமுக 182 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என குறிப்பிட்டுள்ளது.

அதிமுக அதிகபட்சமாக 51 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும், அமமுகவுக்கு 1 இடமும், மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளது.

டெமாக்ரசி நெட்வொர்க்கின் உண்மையான கருத்துக்கணிப்புகள் இவ்வாறு இருக்க, அதிமுக ஊடகங்களில், இதை உல்டா செய்து, அதிமுக வெற்றி பெறுவதாக செய்திகள் வெளியிட்டு மக்கள் ஏமாற்றி உள்ளது தெரிய வந்துள்ளது.