கோவை: தொகுதி பிரச்சினைக்காகவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்  தெரிவித்தார்.

மாநில பாஜக தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் தொகுதி வாரியாக நடைபயணம் செய்து, ஆதரவை திரட்டி வருகிறார். அவரது விமர்சனத்தில் அவ்வப்போது கூட்டணி கட்சியான அதிமுகவும் சிக்கிவிடுகிறது. இதனால், அண்ணாமலைமீது அதிமுக தலைமைக்கு அதிருப்தி நிலவி வந்தது. இந்த சூழலில்தான், அண்ணா குறித்து அண்ணாமலை கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  ‛‛மதுரையில் 1956ல் தமிழ் மாநாட்டில் கடவுளை கேலி செய்து முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பேசியதாகவும், முத்துராமலிங்கத் தேவர் ஆவேசம் அடைந்ததால் அண்ணாவும், பிடி ராஜனும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து ஓடி வந்ததாகவும் கூறினார். இதற்கு அதிமுக எதிர்வினையாற்றியது.  அதிமுக சார்பில் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்ததுடன், கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு,  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இனி எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும் அக்கட்சியின் திட்டவட்டமாக அறிவித்தது.

அதனைதொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, டெல்லி விரைந்தார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். அதேவேளையில் கோவை வந்த மத்திய அமைச்சர் நிர்மலாவுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் சந்தித்து பேசியதும் பரபரப்பை ஏற்படுகிறத.

இந்த சூழலில், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில்,  மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ள நிலையில், அவரின்றி கூட்டம் துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ,  பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக கூட்டணி முறிவுக்குப் பிறகு நடைபெறும் இந்த கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் கூட்டணி முறிவு என்பத 2 கோடி அதிமுக தொண்டர்களின் உணர்வு என்று கூறினார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், கோவையில் மத்தியஅமைச்சரை அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தது தொகுதி பிரச்சினைக் காகவே  என விளக்கம் அளித்தார். மேலும், கோவையில் நேற்று நடைபெற்றது  அரசு நிகழ்ச்சி. அதற்கு அரசு பிரதிநிதிகள் வருவது சகஜம். அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல என்று விளக்கம் அளித்தார்.

அதிமுகவுடன் கூட்டணி இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு என வானதி சீனிவாசன் பதில் அளித்தார்.

இதற்கிடையில், டெல்லி சென்று, பாஜக தலைவர்களை சந்தித்த நிலையில், அண்ணாமலை நேற்று இரவு  தமிழகம் திரும்பினார். இதைத்தொடர்ந்து,  நாளை நடைபெறும் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கிறார். இதனிடையே, சேலத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் முக்கிய நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் தனித்தனியாக ஈ.பி.எஸ் உடன் ஆலோசனை நடத்தினர். அதுபோல,  சென்னை யில் ஆதரவாளர்களுடன் இன்று ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்துகிறார். முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.