சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை முடிவில் மாற்றமில்லை என்றும், ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஜூலை 11ந்தேதி தீர்வு கிடைக்கும் என்றும் முன்னாள் அமைச்சரும், இபிஎஸ் ஆதரவாளருமான ஜெயக்குமார் கூறினார். ஆனால், இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், “ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டால் தான் அறிவிப்பு செல்லும். இது சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டம். கட்சியை சதிகாரர்கள் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர்” என ஆவேசமாக பேசினார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் இன்று முற்பகல் தொடங்கி 1மணி நேரத்தில் முடிவடைந்தது. முன்னதாக பொதுக்குழுவுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வதுக்கு எதிராக அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் கோஷங்களை எழுப்பினர். பொதுக்குழுவிற்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வத்தை முன்னாள் அமைச்சர்கள் யாரும் வரவேற்கவில்லை. பொதுக்குழுவுக்கு வந்த ஓ.பி.எஸ்-ஸை வெளியேறிக் கூறி எடப்பாடி ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.  ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அமைதி யாக இருந்தார். இதையடுத்து எடப்பாடி தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்தார். தொடர்ந்து, பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு ஜூலை 11 மீண்டும் கூடும் என அவைத்தலைவர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து,  பொதுக்குழு உறுப்பினர்கள் ஓபிஎஸ்-ஐ  துரோகி என முழக்கம் எழுப்பினர். மேலும் தண்ணீர் பாட்டிலும் வீசப்பட்டது. இதையடுத்து,  ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மேடையில் இருந்து இறங்கி, வெளியேறினார்.  இதைத்தொடர்ந்து பொதுக்குழு நிறைவு அடைந்தாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம், “ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டால்தான் அறிவிப்பு செல்லும். இது சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற பொதுக்குழு கூட்டம். கட்சியை சதிகாரர்கள் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கின்றனர் என குற்றம்சாட்டினார். ஓபிஎஸ் கையெழுத்து போட்டால்தான் அடுத்த பொதுக்குழு செல்லும். ஜூலை 11ல் அறிவிக்கப்பட்ட புதிய பொதுக்குழு கூட்டம் செல்லாது என தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி, வானகரத்தில் இன்று நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டம், ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதும், அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, அடுத்த பொதுக் குழுக் கூட்டம் வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார் என்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களிம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அதிமுக ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றவர், தமிழகம் முழுவதும் அதிமுக நிா்வாகிகள் கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனா். ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமிதான் இருக்க வேண்டும் என்று நேரில் வந்து ஆதரவும் தெரிவித்து வருகின்றனா். அதிமுக ஒற்றைத் தலைமை முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றவர்,  ஒற்றைத் தலைமை விவாகரத்துக்கு ஜூலை 11ல் நிச்சயம் தீர்வு காணப்படும் என்றார்.