சென்னை: அதிமுக தேர்தல்அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அறிவிப்பு வெயிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதியஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

மோடி தலைமையிலான மத்தியஅரசு இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்ட (Citizenship (Amendment) Act 2019 திருத்தம் கடந்த 2019ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டமானது, மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும் என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு வருகின்றனர். மேலும்,  நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையின மக்கள், இந்த சட்டத்துக்கு எதிராக கொதித்தெழுந்தனர்.

இந்த சட்ட திருத்தத்தம் நிறைவேறுவதற்கு அதிமுக எம்.பி.க்கள் ஆதரவு கொடுத்தனர். அதனால், அதிமுக அரசு மீது கடும் விமர்சனம் எழுந்தது. இந்த சட்டத்தை மாநிலங்களில்  அமல்படுத்துவதற்கு எதிராக கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்பட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும்  மாநிலங்கள் சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழகத்திலும் சிஏஏ சட்டத்துக்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக உள்பட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால், அதை நிராகரித்த முதல்வர் எடப்பாடி,  தமிழகத்தில், சிஏஏ சட்டத்தால் சிறுபான்மையினர்களுக்கு எந்தவித ஆபத்தும்  இல்லை என்றும், தமிழ் மண்ணில் பிறந்த யாருக்காவது இதனால் ஏதாவது பாதிப்பு இருந்தால் சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என கூறியிருந்தார்.

ஆனால், தற்போது, தமிழக சட்டமன்ற தேர்தலைமுன்னிட்டு, அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், சிஏஏ சட்டத்தை கைவிட வலியுறுத்துவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசின் இரட்டை வேடம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி, அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அதிமுக முடிவெடுக்க முடியாது என கூறியுள்ள  சி.டி.ரவி, அது அதிமுகவினுடைய அறிவிப்பு; ஆனால், சிஏஏ சட்டத்தை திரும்ப பெற மாட்டோம் என்றவர்,  அதிமுக தேர்தல் அறிக்கை இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை திரும்ப பெறக் கூறி அவர்களிடம் பேசுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதியஜனதா கட்சி, அதிமுக தேர்தல் அறிக்கை குறித்து விமர்சனம் செய்துள்ளது, அதிமுகவுக்கு பாஜக மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  கூட்டணியில் குழப்பம் உருவாகி உள்ளது.