சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 4ந்தேதி நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகள், அதிமுக மாநில மாநாடு வெற்றி தொடர்பாக ஆலோசிப்பபதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக மூத்த நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து  இரு பிரிவாக  இருந்த அதிமுக பின்னர் இணைந்து, தற்போது மீண்டும் பிரிந்துள்ளது. இதையடுத்து  நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் சட்டப் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.  ஆனால், நீதிமன்றங்களில் இதுவரை நடைபெற்ற வழக்குகளில், எடப்பாடி பழனிச்சாமியே அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். அதுபோல இந்திய தேர்தல் ஆணையமும் எடப்பாடியையே அதிமுக தலைமையாக அங்கீகரித்து உள்ளது.

இந்த பரபரப்பான சூழலில்தான் மதுரையில்ஆகஸ்டு 20ந்தேதி அதிமுக பொன்விழா மாநாடு நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டனர். இதில்,   எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சித் தமிழர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில்மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி  தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 4.9.2023 – திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறும்.

இந்த கூட்டத்தில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரையில் 20.8.2023 அன்று நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறப்புடன் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறு மாநாட்டுக் குழுவினர்கள் அடங்கிய ஆலோச னைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கண்ட பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.