திகில் திரைப்படத்தை மிஞ்சும் திரைமறைவு உடன்பாடு…. எடப்பாடி பழனிச்சாமியே நேரடியாக களம் இறங்கினார்

‘’மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து அ,தி.மு.க. ரகசியமாக பேச்சு நடத்தி வருகிறது’’ என்று ஓ.பி.எஸ். சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் மனம் திறந்தார்.

அதில் பாதி தான் உண்மை. நிஜம் என்ன வென்றால் அவர் பேட்டி அளித்த பின்னர் தான் ரகசிய பேச்சு வார்த்தை நடந்துள்ளது. திகில் சினிமாவை மிஞ்சும் வகையில் நிகழ்ந்த பேச்சுவார்த்தையின் விவரங்களை நிமிடம் வாரியாக பார்க்கலாம்.

தமிழகத்துக்கு  பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பவர் –மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.’’அ.தி.மு.க.வுடன் உடன்பாட்டை உடனடியாக முடிக்க வேண்டும்’’ என்று அமீத்ஷா ஆணை பிறப்பிக்க- அவசரமாக விமானம் மூலம் சென்னை பறந்து வந்தார்.

வியாழன் இரவு 9-20 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையம் வந்து இறங்கினார்.வாசலில் மைக் நீட்டி காத்திருந்த செய்தியாளர்களிடம் உதட்டளவில் அவர் உரையாடினாலும்-மனதுக்குள்  ‘’10..9..8..’’என்று ‘கவுண்டவுண்’’ ஓடிக்கொண்டிருந்தது.

பேட்டி முடிந்ததும் அவரது கார் ஆழ்வார்பேட்டை நோக்கி பாய்ந்து சென்றது. அவரை பொன்.ராதா கிருஷ்ணனும், தமிழிசை சவுந்தரராஜனும் தொடர்ந்தனர்.

ஆழ்வார்பேட்டை மேரீஸ் சாலையில் உள்ள  மறைந்த தொழில் அதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டில் கார் நிறுத்தப்பட்டது. மூவரும் உள்ளே சென்றனர்.

அங்கே ஏற்கனவே மாநில அமைச்சர்கள் பி.தங்கமணியும், எஸ்.பி.வேலுமணியும் காத்திருந்தனர்.

பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழிசையு ம் எந்த சோபாவில் அமரலாம் என இடம் தேடியபோது-இருவருக்கும் ‘ஷாக்’ கொடுக்கப்பட்டது.

’’நீங்கள் இருவரும் பக்கத்து அறையில் சென்று அமர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் கொஞ்சம் பேசப்போகிறோம்’’ என அமைச்சர் தரப்பில் சொல்லப்பட – இருவரும் திகைத்து போய் அடுத்த அறைக்கு சென்று விட்டனர்.

சில வினாடிகளில் மற்றொரு அறையில் ஏற்கனவே காத்திருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமியும், துணை முதல்-அமைச்சர்  ஓ.பி.எஸ்.சும் பியூஷ் கோயல் முன் ஆஜரானார்கள்.

இரவு 10.30 மணிக்கு பேச்சுவார்த்தை ஆரம்பமானது. அ.தி.மு.க. தரப்பில் இபிஎஸ்-ஓபிஎஸ் மற்றும் இரண்டு மணிகள். பா.ஜ.க.தரப்பில் ஒற்றை மனிதராக கோயல்.

அதிகாலை 12.30 மணிக்கு உடன்பாட்டுக்கு வந்தார்கள்.பேச்சு முடிந்ததும் அறையை விட்டு பியூஷ் கோயல , பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகிய மூவரும் முதலில் வெளியே வந்து –காரில் ஏறி  விமான நிலையம் பறந்தனர்.

கொஞ்ச நேரத்தில்  தங்கமணியும், வேலுமணியும் வெளிப்பட்டனர். அவர்கள்  தத்தமது கார்களில் ஏறி  வீடு    திரும்பினர்.

செய்தியாளர்களும் கலைந்து –அலுவலகங்களுக்கு சென்றனர். இரண்டு அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் –பேச்சு வார்த்தை என்று  அவர்கள் செய்தி அடித்து டி.வி,க்களில் ‘பிரேக்கிங்’  போட்டுக் கொண்டிருக்க-

அந்த செய்தியை பொள்ளாச்சி மகாலிங்கம் வீட்டு டி.வி.யில் பார்த்து விட்டு- புன்முறுவல் தவழ –இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ்.இருவரும் வெளியேறினார்கள்.

‘நிஜமாகவே ரகசிய பேச்சு வார்த்தை’ நடத்திய மகிழ்ச்சியுடன்  இல்லம் சென்றனர்.

உடன்பாட்டு விவரம் என்ன?

அ.தி.மு.க.வுக்கு 25 தொகுதிகள்.பா.ஜ.க.வுக்கு 15 தொகுதிகள்.

அ.தி.மு.க.தனது பங்கில் இருந்து –புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தமா.கா.வின் ஜி.கே.வாசன் மற்றும் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரசுக்கு தலா ஒரு தொகுதியை வழங்கும்..

பா.ஜ.க. தனக்கு அளிக்கப்பட்ட 15 –ல் தான் 8 –ஐ எடுத்து கொள்ளும்.பா.ம.க.வுக்கு 4,தே.மு.தி.க.வுக்கு 3 என பிரித்து கொடுக்கும்

இந்த பேச்சு வார்த்தையின் போது பெட்டிகள் பரிமாறப்பட்டதாக வதந்திகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.

உண்மை தன்மை தெரிய வில்லை.

–பாப்பாங்குளம் பாரதி