சென்னை:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற திமுக பேரணியில் கலந்துகொண்ட 85வயது முதியவரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி அழைத்து கவுரவப்படுத்திய புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

மததியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்தை  திரும்பப்பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் 23ந்தேதி நடைபெற்ற பிரமாண்ட கண்டனப் பேரணியில்,  ஓசூரை சார்ந்த நாராயணப்பா என்ற 85 வயது முதியவர் கையில் பதாதையுடன் கலந்து கொண்டு முழக்கமிட்டார். இது பேரணிக்கு வந்தவர்கள் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அந்த முதியவரை தனது அலுவலகத்துக்கு அழைத்த, திமுக தலைவர் ஸ்டாலின், அந்த பெரியவருடன் அளவளாவி, அவரை கவுரவப்படுத்தினார்.

இதுகுறித்து ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்,  முதுமை உடலுக்குத்தான், உள்ளம் என்றும் இளமையுடன் இயக்கத்திற்காக இயங்கும் எனும் வகையில், #CAA எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற ஓசூரின் 84வயது பெரியவர் நாராயணப்பாவிற்கு நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ந்தேன். அவரது கைகளைப் பற்றிய போது, கழகம் எனும் பேரியக்கத்தின் வேர்களைத் தொட்ட உணர்வு!  என்று பதிவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து முதியவர் நாராயணப்பாவை, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் சந்தித்து ஆசி பெற்றார்.

இதுகுறித்து கூறிய உதயநிதி, ‘குடியுரிமை சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற ஓசூரைச் சேர்ந்த 85 வயது நாராயணப்பா தாத்தாவைச் சந்தித்தேன். ‘ஓசூர்ல தலைவர் கலைஞர் கட்டித்தந்த சமத்துவபுரத்துலதான் இருக்கேன். உங்களையும் தலைவரையும் பார்த்ததே போதும்’ என்றார். ‘உங்களை பார்த்ததுல எனக்குத்தான் பெருமை’ என்றேன். ‘உங்க எல்லா படங்களையும் பார்த்துடுவேன். நீங்க மேயர் எலெக்‌ஷன்ல நிக்கும்போது நாந்தான் இங்கவந்து உங்களுக்காக வேலை செய்வேன். ‘நான் மேயரால்லாம் வரமாட்டேன்’னு பேப்பர்ல சொல்லாதீங்க’ என்று செல்லமாகக் கோபப்பட்டவர், ‘அடுத்தமுறை வரும்போது கர்நாடகா அவரைக்காய் எடுத்துட்டு வர்றேன்’ என்றார் எல்லா போராட்டங்கள்லயும் கலந்துப்பேன்.

இப்பக்கூட உனக்கு தில்லு இருந்தா என் மேல வழக்கு போடுனு சொல்லிட்டேன்’ என்றவரிடம், ‘உங்களுக்கு என்னங்கய்யா வேணும்’ என்றேன். ‘ஓசூர் போனதும் சொல்றேன்: என்றபடி என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். இந்த பிணைப்புதான் திமுக.

இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.