டெல்லி: கட்டாய மதமாற்றங்கள் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும்,  பணம், பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது ஆபத்தானது என உச்ச நீதிமன்றம்  தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் மத மாற்றத்தை தடுக்க வேண்டும் என்றும், பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து செய்யப்படும் மதமாற்றம் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது சமூக ஆர்வலர் அஷ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்ஆர் ஷா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, கட்டாய மதமாற்றம் ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், கட்டாய மதமாற்றம் நாட்டை மட்டுமல்லாமல், தனிநபர் மத சுதந்திரத்தையும் பாதிக்கிறது, கட்டாய மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத மாற்றம் தொடர்பான  மனு விசாரணைக்கு உகந்தது அல்ல வாதிடப்பட்டது.

ஆனால், இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், முக்கிய கருத்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக மத அறப்பணிகள் என்பது மதமாற்றத்தை நோக்கமாக கொண்டிருக்கக் கூடாது, பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் அளித்து செய்யும் மதமாற்றம் மிகவும் ஆபத்தானது, அரசியல் சாகனத்தின் அடிப்படைக்கு எதிரானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் மதமாற்ற தடுப்புச் சட்டம் தொடர்பாக மாநிலங்களிடம் இருந்து விரிவான தகவல்களை பெற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். ஏற்கனவே இந்த வழக்கில் மத்திய அரசு ஒரு பதில் மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக மத்திய பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ள சட்டத்தை ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை குறிப்பிட்டிருந்தது.

ஒடிசா, மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், கர்நாடகம், அரியானா ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதையும் மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்த நிலையில், விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்தனர்.

மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம் இல்லை – மதமாற்றம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! உச்சநீதிமன்றம் கருத்து.