வீரப்பன் - விஜயகுமார் - கவுதமன் (இடமிருந்கது டிகாரச்சுற்றில்)
வீரப்பன் – விஜயகுமார் – கவுதமன் (இடமிருந்கது டிகாரச்சுற்றில்)

ந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும், அவரது மரணம் “மர்மம்” என்கிற தனலாக தகித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், வீரப்பனை சுட்டுக்கொன்ற அதிரடிப்படையின் தலைவராக இருந்த விஜயகுமார் ஐ.பி.எஸ். “வீரப்பன் ஆபரேசன்” குறித்து புத்தகம் எழுதி வெளியிடப்போவதாக செய்”தீ” பரவி அனலடிக்க ஆரம்பித்திருக்கிறது.
“ விஷம் கொடுத்து கொல்லப்பட்ட வீரப்பனைத்தான்  மீண்டும் “சுட்டுக்கொன்றதா” அதிரடிப்படை சுட்டுக் கொன்றதா” என்ற சர்ச்சையைப் பற்றியும் அந்த புத்தகத்தில் விஜயகுமார் சொல்லியிருக்கிறாராம்.
அதாவது, “அதிரடிப்படையின் உளவுத்துறை ஆட்கள், விடுதலைப்புலிகள் போல வீரப்பனை தொடர்புகொண்டார்கள். புலித்தலைவர் பிரபாகரனை சந்திக்க அழைத்துச் செல்வதாக அவர்கள் சொன்னதை நம்பி, அவர்களது வாகனத்தில் வீரப்பன் மற்றும் குழுவினர் ஏறினர். வழியில் அவர்களது வாகனத்திலிருந்து இறங்கும்படி சொன்னோம். அதைக் கேட்காமல் அவர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். பதிலுக்கு நாங்கள் சுட்டோம். வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் குண்டடி பட்டு இறந்தார்கள்” என்பதுதான் காவல்துறை சொலலும் சித்திரம். இதைத்தான் தனது புத்தகத்திலும்  விஜயகுமார் எழுதி இருக்கிறாராம்.
வீரப்பன் மரணம் குறித்து திரைப்பட இயக்குநர் வ.கவுதமனை தொடர்புகொண்டு கேட்டோம்.   “சந்தனக்காடு” என்ற தலைப்பில் வீரப்பன் வாழ்க்கையை தொலைக்காட்சித் தொடராக எடுத்து ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தவர்.
பிணமாக வீரப்பன்
பிணமாக வீரப்பன்

வீரப்பனின் நம்பிக்கைக்கு உரிய உறவினர் ஒருவரிடம் காவல்துறை அதிகாரி, விஷம் கலந்த உணவைத் தருவது போலவும், அதை அந்த உறவினர் வீரப்பனிடம் கொடுப்பது போலவும் அத் தொடரில் வரும் காட்சி, தமிழகத்தை அதிரவைத்தது.
இந்தத் தொடரை எடுப்பதற்கு முன்பு, வீரப்பன் வாழ்ந்த பகுதியில் பலரையும் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டவர் வ. கவுதமன் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர், “விஜயகுமார் ஐ.பி.எஸ். அவர்கள் வீரப்பன் குறித்து புத்தகம் எழுதப்போவதாக யூகச் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த புத்தகம் வந்த பிறகு விமர்சிப்பதே சரியாக இருக்கும். அதே நேரம் வீரப்பனை சுட்டுப்பிடித்ததாக அவர் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். அப்படித்தான் எழுதப்போகிறார் என்றால் அது குறித்து விளக்குவதும், கேள்வி கேட்பதும் எனது கடமை.
ஏனென்றால் “சந்தனக்காடு” தொடர் கற்பனை அல்ல.  வீரப்பன் வாழ்க்கையைப் பற்றிய உண்மைத்தொடர். வாழ்க்கை வரலாறு. அந்தத் தொடரை உருவாக்கும் முன்பு, வீரப்பன் வாழ்ந்த பகுதிகளில் மூன்று மாதங்கள் அந்த மக்களோடு மக்களாக பழகி பலவித தகவல்களை சேகரித்தேன்.
வீரப்பனுக்கு உதவிய போலீஸ்காரர்கள், வீரப்பனால் பாதிக்கப்பட்ட போலீஸ்காரர்கள், வீரப்பனிடம் உதவி பெற்ற பொது மக்கள், பாதிக்கப்பட்ட சிலர் இப்படி அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து தகவல்களை சேகரித்தேன்.
வீரப்பனுக்கு விசம் கொடுத்ததாக சொல்லப்பட்ட அந்த நபரையும் சந்திக்க சென்றேன். வீரப்பன் மரணத்துக்கு முன் தினக்கூலியாக வறுமையில் இருந்தவர் அவர். நான் சென்றபோது, பெரிய வீடு ஒன்றை கட்டிக்கொண்டு இருந்தார்.
அவரது வீட்டுக்குச் சென்று “வீரப்பன் பற்றி தொடர் எடுக்கப்போகிறேன்” என்று நான் சொன்னதுதான் தாமதம்… எங்கிருந்துதான் அவருக்கு அத்தனை ஆத்திரம் வந்தததோ…
“தொடர் எடுக்கறதுனா எடுக்க வேண்டியதுதானே.. உனக்கு இங்கே என்ன வேலை” என்று என்னிடம் தகராறு செய்ய ஆரம்பித்துவிட்டார்.
வீரப்பன் இறந்த பிறகு அவருக்கு திடுமென அத்தனை பணம் வந்திருக்கிறது என்று அங்குள்ள சிலர் சொல்வதையும் கேட்டேன்” என்ற கவுதமனிடம், “விடுதலைப்புலிகளை சந்திக்க அழைத்துப் போவதாகச் சொல்லித்தான் அதிரடிப்படையின் உளவுப்பிரிவு வீரப்பனை நம்பவைத்தது என்று சொல்லப்படுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்றோம்.
அதற்கு அவர், “விடுதலைப் புலிகள் என்கிற தமிழ்ப்போர்வையில் வீரப்பன் சந்தித்தது காவல்துறையின் உளவுக்குழு. பிரபாகரனை சந்திக்கலாம் என்று அவர்கள் வீரப்பனிடம் சொல்லியும் இருக்கலாம்.
ஆனால் இவர்கள் சொன்னதைக் கேட்டு  வீரப்பன் மயங்கவிட்டார் என்று சொல்ல முடியாது. எல்லாவிதமாத சூழ்ச்சிகளையும் துரோகங்களையும் சதிகளையும் கடந்துதான் முப்பதாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தார் வீரப்பன். ஆகவே நடித்து அவரை நம்ப வைத்தார்கள் எந்பது சாத்தியமில்லாதத விசயம்” என்றார் கவுதன்.
அவரிடம், “சதி செய்து விசம் வைத்துத்தான் வீரப்பனை காவல்துறை கொன்றது என்று எப்படிச் சொல்கிறீர்கள்” என்றோம்.
வீரப்பன் சமாதி
வீரப்பன் சமாதி

அதற்கு அவர், “வீரப்பனுக்கு விசம் கொடுக்க அவரது நம்பிக்கைக்கு உரிய வேறு சிலரை வைத்தும் முயற்சித்தது காவல்துறை. வீரப்பன் இடம் வரை சென்ற அவர்கள், வீரப்பனுக்கு பயந்துகொண்டு திரும்பிவிட்டார்கள். அவர்களில் ஒருவரையும் சந்தித்து பேசினேன்.  அது காட்சி ஆவணமாக இன்றும் என்னிடம் இருக்கிறது” என்றார் கவுதமன்
அடுத்ததாக கவுதமன் வீரப்பனின் இறுதி நாட்கள் பற்றி சொல்ல ஆரம்பித்தார்:
“வீரப்பனை பிடிக்க அமைக்கப்பட்ட படைக்கு விஜயகுமார் பொறுப்பேற்பதற்கு முன்பே ஒரு திட்டம் தீட்டப்பட்டது. அதாவது, “வீரப்பன் காட்டுக்குள் மறைந்து இருந்தபடி அதிரடிப்படைகளை நோக்கி சுடுகிறார். அவரைச் சுடுவது நமக்கு சிரமமாக இருக்கிறது. ஆகவே சிறிது நாள் தேடுதல் வேட்டையை நிறுத்தி வைப்போம், வீரப்பன் தைரியமாக வெளியே வர ஆரம்பிக்கக்கூடும். அதன் பிறகு வீரப்பனை சுற்றி வளைப்பது எளிதாக இருக்கும்” என்று சொல்லப்பட்டது. அதன்படி அதிரடிப்படை வேட்டை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து வீரப்பன் கொஞ்சம் வெளியில் வர ஆரம்பித்தார். தனக்கு நெருங்கிய  சிலரிடம் தனக்குப் பிடித்த உணவுகளைச் செய்யச்சொல்லி சாப்பிட்டு வந்தார். அப்போதுதான் வீரப்பனுக்கு நெருக்கமான சிலருக்கு ஆசை காட்டியும் மிரட்டியும் விசம் வைத்த உணவை கொடுக்க முயன்றது காவல்துறை. அதற்கு உடன்பட்ட சிலரும் “வீரப்பனுக்கு தெரிந்துவிட்டால் கொன்றுவிடுவாரே” என்று கடைசி நேரத்தில் பயந்து பின்வாங்கிவிட்டார்கள்.
இறுதியாக வீரப்பனின் சின்னம்மா முறைகொண்ட பெண்மணியையும் அவரது மகனையும் மிரட்டிய காவல்துறை, “நாங்கள் கொடுக்கும் விசத்தை உணவில் கலந்து வீரப்பனுக்கு நீங்கள் கொடுக்க வேண்டும்” இல்லாவிட்டால் உங்கள் இருவரையும் கொன்றுவிடுவோம் என்று கடுமையாக மிரட்டியது.
இதற்கு பயந்து அவர்கள் உடன்பட்டார்கள். அந்த  பெண்மணி ராகி கூழ் தயாரிக்க, அதில் காவல்துறை அளித்த விசத்தை கலந்து அந்த இளைஞர் (பெண்மணியின் மகன்) வீரப்பனிடம் கொடுக்க.. நம்பி சாப்பிட்ட வீரப்பனும் அவரது குழுவினரும் மயங்கி விழுந்து இறந்தனர். அதன் பிறகுதான் அவர்களது பிணத்தைத்தான் சுட்டது காவல்துறை” என்ற கவுதமன், ஒரு கேள்வியை முன்வைத்தார்:
“வீரப்பன் உடல் மூலக்காட்டில் புதைக்கப்பட்டது அல்லவா.. அந்த சமாதிக்குள்  வீரப்பன் உடல் இருக்கிறதா என்கிற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
அப்படி வீரப்பன் உடல் இருந்தால், அதை மறுபடி போஸ்மார்ட்டம் செய்ய வேண்டும். அதற்கு காவல்துறையோ விஜயகுமாரோ தயாரா?” அதிரடியான கேள்வியுடன் முடித்தார் வ.கவுதமன்.
இதற்கு காவல்துறையும் அரசும்தான் பதில் சொல்ல வேண்டும்.