“உட்தா பஞ்சாப்” திரைப்படம், குறித்த மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு,  சென்சார் போர்டு குறித்த சர்ச்சையை உச்சகட்டத்துக்கு கொண்டு சென்றுவிட்டது.
“சென்சார்போர்டு சான்றிதழ்தான் அளிக்க வேண்டும். காட்சிகளை நீக்கச் சொல்லும் உரிமை அதற்குக் கிடையாது” என்று நீதிமன்றம் சொல்ல…
சென்சார்போர்டு தலைமை அதிகாரி நிஹலானி, “இனி, ஆபாசமாக வக்கிரமாக படம் எடுக்கும் சுதந்திரம் கிடைத்துவிட்டது” என்று  கருத்து தெரிவித்திருக்கிறார்.
இதுதான் இப்போது இந்திய திரையுலகு முழுதும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
a
இந்த நிலையில் நாம், திரைப்பட இயக்குநர் வ.கவுதமனை தொடர்புகொண்டு அவரது கருத்தை கேட்டோம்.
வீரப்பன் (சந்தனக்காடு) மற்றும் ஆட்டோ சங்கர்  ஆகியோரது வாழ்க்கையை தொலைக்காட்சி தொடராக எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இவரது “கனவே கலையாதே”,  “மகிழ்ச்சி” திரைப்படங்களும் அனைவரின் பாராட்டைப் பெற்றன.
இதோ, சென்சார் போர்டு குறித்த இவரது கருத்து:
“சென்சார் போர்டு குறித்து நீதிமன்றம் தெரிவித்திருப்பது மிகச் சரியே.
அறிவார்ந்தவர்கள்,  சமூக பொறுப்பு உள்ள மனிதர்கள், எழுத்தாளர்கள்,  சேவகர்கள்தான் சென்சார் போர்டு உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் தணிக்கை குழு என்பது தகுதி வாய்ந்ததாக இருக்கும்.  திரைப்படம் என்கிற படைப்பை உருவாக்குபவர் சிற்பி. அந்த சிற்பியையே மேலும் பண்பட்டவராக செதுக்குவதுதான் தணிக்கைத் துறையின் பணி.
ஆனால் உண்மை நிலை அப்படி இல்லை.
ஆளும் அரசியல்வாதிகள், தங்களை அண்டிப்பிழைப்பவர்களையே தணிக்கை குழுவில் நியமிக்கிறார்கள். இவர்கள், அதிகார வர்க்கத்தின் கையாளாக செயல்படுகிறார்கள். அதிகார வர்க்கத்துக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் திரைப்படங்கள் வந்தால் அதை தடுக்கும் அயோக்கியத்தனத்தைச் செய்கிறார்கள்.
பொதுவாக தணிக்கைக்குழு உறுப்பினர்கள், அதிகார வர்க்கத்தின் கையாளாக இருக்கிறார்கள் என்பதற்கு எனது நேரடி அனுபவமே ஒரு உதாரணம்.
b
எனது “மகிழ்ச்சி” திரைப்படத்தில் ஒரு காட்சி. ஒரு மாணவனுக்கு பள்ளியில் பரிசு வழங்குவார்கள். அப்போது அவனது பெயரான “பிரபாகரன்” என்று சொல்லி அழைப்பார்கள்.
உடனே ஒரு தணிக்கைக்குழு உறுப்பினர், “விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை குறிப்பிடுகிறீர்கள்..இந்த காட்சியை நீக்க வேண்டும்” என்றார்.
நான், “பிரபாகரன் என்ற பெயரில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். என் அக்காள் மகன் பெயரும் பிரபாகரன்தான். அது ஒரு பெயர். அதை ஏன் தவறு என்கிறீர்கள்” என்று கேட்டேன்.
அவர், “நீங்கள் விடுதலைப்புலி ஆதரவாளர். ஆகவே அந்த இயக்கத்தின் தலைவரை மனதில் வைத்தே இந்த பெயரை வைத்திருக்கிறீர்கள்” என்றார்.
எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. “அய்யா.. இந்த படத்தில் விடுதலைப்புலிகள் பற்றியோ, ஈழ விவகாரம் பற்றியோ எதுவுமே சொல்லப்படவில்லையே.. பிறகு ஏன் அந்த விவகாரத்தை இழுக்கிறீ்ர்கள்” என்றேன்.
பிறகு இன்னொரு உறுப்பினர், “என் மகன் பெயரும் பிரபாகரன்தான். அதற்காக காட்சியை நீக்க வேண்டியதில்லையே” என்றார்.
அதன் பிறகுதான் அந்த இன்னொரு உறுப்பினர் அமைதியானார்.
தணிக்கை முடிந்த பிறகு, அந்த உறுப்பினரை அழைத்து, “பிரபாகரன் என்ற பெயரே படத்தில் வைக்கக்கூடாதா.. ஏன் எதிர்த்தீர்கள்” என்று கேட்டேன்.
அதற்கு அவர், குறிப்பிட்ட ஒரு அரசியல்வாதியின் பெயரைச் சொல்லி, “அவர்தான் எனக்கு தணிக்கை குழு உறுபபினர் பதவியை பெற்றுத்தந்தார். அவருக்கு விடுதலைப்புலிகளை பிடிக்காது. பிரபாகரன் என்ற பெயரை நான் அனுமதித்தால், என்னை அந்த அரசியல் தலைவர் தவறாக நினைப்பார்” என்றார்.
இப்படித்தான் இருக்கிறது நமது தணிக்கைக்குழுவின் நிலை.
தணிக்கைக்குழுவில் விதிவிலக்காக சில தரமானவர்கள் இருக்கலாம். மற்றபடி,  சென்சார் போர்டில் பொறுக்கிகளும், கோமாளிகளும், முட்டாள்களுமே இருக்கிறார்கள்!” என்று ஆவேசமாக சொன்ன கவுதமன்,
“இந்தியா அளவில் சென்பார்போர்டு விதி என்கிறார்கள். அது தவறு. இந்தியா என்பது பல தேசங்களை உள்ளடக்கியது.
தெலுங்கு தேசம் என்கிறார்கள்.. அங்கே தனி கலாச்சாரம், மரபு இருக்கிறது. அதே போல வங்காளத்துக்கு என்று தனி கலாச்சாரம், மரபு இருக்கிறது.
இங்கே ஜல்லிக்கட்டு என்பது நம் பாரம்பரியம்.  வருடம் முழுதும் காளைகளை, கண்ணுக்குள் வைத்து பாதுகாக்கிறோம். ஒரு நாள் அதனுடன் விளையாடுகிறோம். ஆனால் அதை சித்திரவைதை செய்வதாக வடக்கத்தியர் சொல்கிறார்கள்.
c
ஆனால் மாட்டுத்தோலை வைத்து பூட்ஸ் அணிகிறார்கள், பெல்ட் போட்டுக்கொள்கிறார்கள். உலகிலேயே அதிகமாக மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்வது இந்தியாதான். அதெல்லாம் தவறில்லையாம்..
இன்னொரு கோணத்தில் யோசித்துப்பாருங்கள்.  ஹோலி என்ற பெயரில் ரசாயன கலவையை பிறரது முகத்தில் பூசிக்கொண்டாடுவது தவறு என்று நாமும் சொல்லலாமே.. அப்படி நாம் சொல்லப்போவதில்லை. ஆனால் இந்த கோணத்திலும் யோசிக்க வேண்டாமா?
ஆகவே ஒரே வரையறையை வைத்துக்காண்டு இந்தியா முழுமைக்கும் படங்களை தணிக்கை செய்ய நினைப்பதே தவறு” என்று சொல்லி முடித்தார் கவுதமன்.
– டி.வி.எஸ் சோமு