பிளாக் டிக்கெட்” என்றால் குற்றமாக பார்க்கப்பட்ட காலம் ஒன்று உண்டு.   அதாவது மாஸ் ஹீரோக்கள் படம் ரிலீஸாகும் போது கூட்டம் அதிகம் இருக்கும். அதைப் பயன்படுத்தி லோக்கல் ரவுடிகள் அதிகமான டிக்கெட்டை கவுண்டரில் வாங்கி வெளியே  அதை அதிக விலைக்கு விற்பார்கள். சில சமயங்களில் தியோட்டர் நிர்வாகத்துடன், ரவுடிகள் கூட்டணி வைத்து பிளாக்கில் டிக்கெட்டுகளை விற்பதாகவும் புகார்கள் எழுந்தது உண்டு.
ஆனால் கடந்த சில வருடங்களாக, தியேட்டர் கவுண்ட்டரிலேயே அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை நடக்கிறது.  குறிப்பாக ரஜினி போன்ற மாஸ் ஹீரோக்கள் படங்கள் வெளியாகும் போது முதல் சில நாட்களில் இந்த பிளாக் விற்பனை வெளிப்படையாகவே நடக்கிறது.
தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறை சட்டத்தின்படி, மாநகரங்களில் உள்ள திரையரங்குகளில் குறைந்தது ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.95 வரைதான் கட்டணமாக வசூலிக்க வேண்டும். குளிர்சாதனம் உள்ளிட்ட வசதிகளை கொண்ட திரையரங்குகள் ரூ.10 முதல் ரூ.120 வரை கட்டணமாக வசூலிக்கலாம். ஆனால், அரசு நிர்ணயித்துள்ள இந்த கட்டணத்தை விட, பல மடங்கு அதிகமாக திரையரங்கு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர். இதுபோல் பிற மாவட்டங்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது குறித்து பலர் ஆதங்கப்பட்டாலும், என்ன செய்வது என்று நினைத்தார்கள். ஆனால்  செம்பியத்தை சேர்ந்த கோ.தேவராஜன் என்பவர், இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதுவும் ரஜினி நடித்து வெளியான “லிங்கா” படத்துக்கு அதிக தொகை வசூலிக்கப்பட்டது குறித்துதான் வழக்கு தொடர்ந்தார்.

"லிங்கா" ரஜினி - "கபாலி" ரஜினி: மாற்றம் இருக்குமா?
“லிங்கா” ரஜினி – “கபாலி” ரஜினி: மாற்றம் இருக்குமா?

அவரது மனுவில், “ புகழ் பெற்ற நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் என்றால், படம் வெளியான நாள் முதல் 5 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 6 காட்சிகள் வரையில் திரையிடப்படுகிறது.  அதோடு, பெரும் தொகையையும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பார்க்க வந்த பொதுமக்களிடம் ரூ.200 முதல் ரூ.250 வரை கட்டணமாக திரையரங்கு உரிமையாளர்கள் வசூலித்தார்கள். இதன்மூலம் ஒரு திரையரங்கு உரிமையாளர், ஒரு காட்சிக்கு ரூ.1.50 லட்சமும் வீதம், ஒரு நாளில் திரையிடப்பட்ட 6 காட்சிகள் மூலம் ரூ.9 லட்சம் வரை, அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதலாக வசூலித்துள்ளனர்.
இவ்வாறு மிகப்பெரிய முறைகேடு மாநிலம் முழுவதும் நடந்துள்ளது. இதுகுறித்து ஏற்கனவே நான் கொடுத்த புகார் மீது புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றச்சாட்டை கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீஸ் கமிஷனர் ஆகியோர் கூறியுள்ளனர். எனவே, இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.” என்று தேவராஜன் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு விசாரித்தது தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
“தமிழக அரசு அதிகபட்ச கட்டணமாக தியேட்டர்களில் ரூ.120 மட்டுமே வசூலிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால்  தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பல விதிமீறல்கள் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
இந்த விதிமீறல்களை வணிகவரித் துறை மற்றும் தியேட்டர்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரிகள் ஆய்வு செய்து, குறைந்த கட்டணத்தில் சினிமா பார்ப்ப தற்கான வசதியை மக்களுக்கு அளிக்க வேண்டும்.
எனவே, இந்த விதி மீறல்கள் குறித்து கண்காணிக்க தனிக் குழுவை அரசு நியமிக்க வேண்டும். தியேட்டர்கள் தொடர் பான புகார்களை இக்குழுவுக்கு அனுப்புவதற்கான வழிமுறை களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது இந்தக் குழு முறையான நடவடிக்கை எடுக்கும் என நம்புகி றோம். தமிழக அரசு 3 வாரங் களுக்குள் இதற்கான நடவடிக் கைகளை எடுக்க வேண்டும்”  என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.
இந்த தீர்ப்பு குறித்து அரசு அதிகாரிகள் வட்டாரத்தில், ““கடந்த மார்ச் மாதமே  இந்த தீர்ப்பு வெளியாகிவிட்டது. ஆனால் இதற்கான முறையான கண்காணிப்பு குழு அமைக்கப்படவில்லை என்பதே உண்மை. ஆனால்  இந்த மாத இறுதிக்குள் குழு அமைக்கப்பட்டுவிடும்” என்று கூறப்படுகிறது.
 
“இந்த மாத இறுதியில் குழு அமைத்து டிக்கெட் விலை கண்காணிக்கப்படும் எனறால், அதில் பாதிக்கப்படப்போவது ரஜினியின் “கபாலி” திரைப்படம்தான்” என்று ஒரு பேச்சும் உலவுகிறது. ஏனென்றால் அடுத்த மாத துவக்கத்தில் “கபாலி” திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து  கோலிவுட் வட்டாரத்தில் சிலரிம் பேசினோம், அவர்கள், ““ரஜினி படம் என்றாலே பிரம்மாண்டம்தான். எவ்வளவு என்று சொல்லமுடியாத அளவுக்கு பெரும் தொகை ரஜினிக்கு சம்பளமாக அளிக்கப்படுகிறது. அதோடு அவரது படத்தில் நடிப்பவர்களும் பெரும் நட்சத்திரங்கள்தான். மேலும் இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்  போன்றவர்களும் பெரும் புகழ் பெற்ற.. அதிக சம்பளம் வாங்குபவர்கள்தான். மேலும் படத்துக்கு ரிச்னஸ் ( பிரம்மாண்டம்) காட்ட பெருந்தொகை செலவிடப்படுகிறது. அதோடு விளம்பரம், ஆடியோ வெளியீடுகள் போன்றவையும்  பெரிய அளவில் இருக்கும். ஆகவே அரசு நிர்ணயித்தி 120 ரூபாய் கட்டணம் கட்டுப்படி ஆகாதே” என்கிறார்கள் கோலிவுட் ஆசாமிகள்.
சமூக ஆர்வலர்களோ, “எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை தோராயமாக கணக்கிட்டு அதற்கேற்ப படத்தை எடுக்க வேண்டியதுதானே. கோடி கோடியாக செலவு செய்து,  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவா படம் எடுக்கிறார்கள்?  “மாஸ் ஹீரோக்கள்” என்று இவர்களாகவே உருவாக்கிக்கொண்டு பெரும் பணம் சம்பளமாக கொடுக்கிறார்கள். இது யாருடைய தவறு.
ஒருவேளை கட்டணம் குறைவாக இருக்கிறது என்று திரைத்துறையினர் நினைத்தால், கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று  அரசிடம் கோரிக்கை வைக்கலாம். அதைவிட்டு தாங்களே கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது அரசையும் மக்களையும் ஏமாற்றும் செயல்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
பார்ப்போம்.. ரஜினி நடித்த “லிங்கா” படத்துக்கு அதிக கட்டணம் வசூலித்ததற்காக போடப்பட்ட வழக்கு…  இப்போது ரஜினியின் “கபாலி” வெளியாக இருக்கும் சூழலில் தீர்ப்பு வந்திருக்கிறது.
தீர்ப்பு செயல்படுத்தப்படுகிறதா என்று பார்ப்போம்!

  • சுந்தர்