திருவனந்தபுரம்

ச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள அரசு ஆதரவு டிவீட்டை அடுத்து டென்னிஸ் வீராங்கனை மரியா ஷெரபோவாவிடம் மலையாளிகள் மன்னிப்பு கோருவது குறித்த ஒரு செய்தி இதோ.

ரஷ்யாவைச் சேர்ந்த சர்வ தேச டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா கடந்த 2014 ஆம் ஆண்டு “யார் அந்த சச்சின்?” என ஒரு கேள்வி கேட்டிருந்தார்.  அது கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.  மரியா தமக்கு உண்மையிலேயே சச்சின் பற்றித் தெரியாது என விளக்கம் அளித்தும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கடுமையாகக் கேலி செய்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டனர்.

குறிப்பாக  கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மலையாளிகள் மரியாவின் முக நூல் பக்கத்தில் கிரிக்கெட் கடவுளான சச்சினைத் தெரியாத மரியா ஷரபோவா என்னும் பாணியில் கேலி பேசினார்கள்.  ஆனால் இன்று அவ்வாறு கேலி செய்தோர் பலர் மரியாவிடம் மன்னிப்பு கோரி டிவிட்டரில் பதிவிடுகின்றனர்.  தற்போது சாரி மரியா ஷரபோவா என்னும் ஹேஷ்டேக் மிகவும் டிரண்டாகி வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் வேளான் சட்டங்களை ஆதரித்தும் விவசாயிகள் போராட்டத்தில் அரசு தரப்புக்கு ஆதரவு தெரிவித்தும் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு என கூறப்படுகிறது. இந்த டிவிட்டரால் உலக அளவில் சச்சின் மீது எழுந்துள்ள வெறுப்பால் மரியாவிடம் ஏராளமானோர் மன்னிப்பு கேட்டு அவருடைய முகநூல் பக்கத்தில் பின்னூட்டம் இட்டுள்ளனர்.