நேபிடாவ்

மியான்மர் நாட்டில் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூகியை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஐநா பாதுகாப்புக் குழு வலியுறுத்தி உள்ளது.

நெடுங்காலமாக ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த மியான்மர் நாட்டில் கடந்த சில வருடங்களாகக் குடியாட்சி நடந்து அந்நாட்டின் தலைவராக ஆங் சான் சூகி ஆட்சி செய்து வந்தார்.  அவரது ஆட்சிக் காலம் முடிந்து நவம்பர் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகி மீண்டும் வெற்றி பெற்றார்.  ஆனால் அந்நாட்டு ராணுவம் அதை ஏற்க மறுத்தது.

தேர்தலில் முறைகேடுகள் செய்து ஆங் சான் சூகி கட்சியினர் வெற்றி பெற்றதாக ராணுவம் எழுப்பிய குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.  இதைத் தொடர்ந்து ராணுவத்துக்கும் மியான்மர் அரசுக்கு தொடர்ந்து மோதல் நீடித்தது.   இதையொட்டி ராணுவப் புரட்சி ஏற்பட்டு ஆங் சான் சூகி உள்ளிட்ட  பலர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்தோரை ராணுவம் சிறையில் அடைத்துள்ளது.   அத்துடன் ராணுவம் ஓராண்டுக் காலத்துக்கு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது.  ஓராண்டு ராணுவ ஆட்சிக்கு பிறகு தேர்தலை நடத்தி வெற்றி பெறுவோரிடம் அதிகாரம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தது.  இதற்கு இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.   ஆங் சான் சூகியை ராணுவம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஐநா பாதுகாப்புக் குழு வலியுறுத்தி உள்ளது.