சென்னை:
தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சித்தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.சே. வாசன் இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
நடைபெற்ற முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக மற்றும் பாமக, தேமுதிக, தமிழ்மாநில காங்கிரஸ், புதிய தமிழகம் உள்பட பல கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தன. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலும், இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளதால், கூட்டணி கட்சித்தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்து பேசி வந்த நிலையில், இன்று ஜி.கே.வாசன், பிரதமரை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்தையும் விரைவில் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும், பாஜக தலைமையில் சிறுகட்சிகளை ஒன்றிணைத்து, 2021ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு எதிராக களம் இறங்க பாஜக திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.