சென்னை:

னியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியால் வெளிக்காற்றை சுவாசித்த மன நோயாளிகள் உற்சாகமாகவும் சந்தோஷத்துடன் ஆனந்த கூத்தாடினர்.

மனநோய் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது கீழ்ப்பாக்கம்தான். அங்குள்ள மனநோய் மருத்துவமனையே, மனநோயாளிகளுக்கு மருத்துவ வசதி கொடுத்து பாதுகாத்து வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மனநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மனநலம் பாதிப்பு காரணமாக,  அவர்களது குடும்பத்தினர் புறக்கணித்தால், இளம் வயது முதல் வயதானவர்கள் வரை ஏராளமானோர்   பல ஆண்டுகள் கடந்தும் மருத்துவமனை காப்பகத்தி லேயே சிக்குண்டு தங்களின் வாழ்க்கையை பறிகொடுத்து வருகின்றனர். இவர்களில் பலர் வெளி உலகை காணாமல், காப்பகத்தின் 4 சுவர்களுக்கு உள்ளே கிடந்து மறைந்த விடுவதும் உண்டு.

இவர்களின் வாழ்க்கையை கண்டு பலர் மனவேதனை அடைந்தாலும், அவர்களுக்கு மேற்கொண்டு உதவி செய்ய யாரும் முன்வருவதில்லை. இந்த நிலையில், தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று சுமார் 20 ஆண்டுகளாக வெளிக்காற்றை சுவாசிக்காத மனநோயாளிகளை வெளி உலகுக்கு அழைத்துச்செல்ல விரும்பியது.

இதற்காக அரசு அனுமதியை பெற்று சுமார் 90 பேரை 4 சுவருக்குள் இருந்து வெளியே கொண்டு வந்து, அவர்களின் சீருடைகள் மாற்றப்பட்டு, சாதாரண மனிதர்கள் போல புதிய சீருடைகள் வழங்கப்பட்டு உடுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களை வாகனத்தில் அழைத்துக்கொண்டு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் அழைத்துச் சென்றனர்.

அங்குள்ள   சுற்றுலா இடங்களில் அவர்களை இறங்கி விட்ட தொண்டு நிறுவனத்தினர், அவர்களை அங்குள்ள சிற்பங்களை கண்டுகளிக்க அறிவுறுத்தினர். அவர்களும் ஆந்த மழையில் நனைந்தவாறு, அங்குற்ற சிற்பங்களை ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். கடற்கரையில் அமர்ந்து அலைகளின் ஓசையையும்… கடலின் அழகையும் ரசித்து அனுபவித்த அவர்களின் முகத்தில்தான் எவ்வளவு சந்தோஷம்….  இவர்களா..  மனநோயாளிகள் என்று சுற்றுப்பயணிகளே வியக்கும் வகையில் அவர்களின் நடவடிக்கை காணப்பட்டது.

பின்னர் மாலையில் காப்பகத்துக்கு மீண்டும் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பாக சில செவிலியர்கள், பாதுகாவலர்களும் அழைத்து செல்லப்பட் டிருந்தது குறிப்பிடத்தக்கது.