அ.தி.மு.க. வென்ற தொகுதிகளை கேட்கும் பா.ஜ.க…. இடப்பங்கீட்டில்  சிக்கல்..

அ.தி.மு.க .எம்.பி.க்கள் இனியும் பொறுமை காப்பதாக இல்லை.

‘அம்மா’எதிர்த்த திட்டங்களை எல்லாம் நிர்ப்பந்தம் காரணமாக நாடாளுமன்றத்தில் ஆதரித்தது—விளை நிலங்களை அழித்தொழிக்கும் மத்திய அரசின் திட்டங்களை ஏற்றுக்கொண்டது– பல்வேறு ரெய்டுகளின் போது மவுனம் காத்தது- என அ.தி.மு.க.எம்.பி.க்கள் –தன்மானம் துறந்து நிறையவே தியாகம் செய்திருந்தனர்.

அடிமடியிலேயே கை வைக்கும்  வேலையை –பா.ஜ.க. ஆரம்பித்துள்ளதால் அ.தி.மு.க .எம்.பி.க்கள் போர்க்கோலம் பூண தயாராகி விட்டனர்.

என்ன காரணம்?

தேர்தல் உடன்பாடு காண பா.ஜ.க.நடத்தும் பேரம் தான்.

பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக் கப்பட்டு உள்ளார். இவருடன் தான் அ.தி.மு.க .சார்பில் அமைச்சர்கள் பி.தங்கமணியும், எஸ்.பி.வேலுமணியும் பேச்சு நடத்தி வருகிறார்கள்.

தனது கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தம் 10 தொகுதிகளை கேட்கிறது பா.ஜ.க.ஆனால் 6 இடங்களை மட்டுமே கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்த  அ.தி.மு.க நீண்ட இழுபறிக்கு பின் கூடுதலாக மூன்று தொகுதிகளை தர முன் வந்தது.

அதன் பிறகு பா.ஜ.க.வைத்த கோரிக்கை தான் அ.தி.மு.க.எம்.பி.க்களை சினம் கொள்ள வைத்துள்ளது.

தங்கள் பட்டியலில் -தென் சென்னை, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, பெரம்பலூர் ஆகிய தொகுதிகளையும் குறித்து கொடுத்துள்ளது பா.ஜ.க. இந்த 5 தொகுதிகளும் இப்போது அ.தி.மு.க.வசம் உள்ளன.

வடக்கு மண்டலத்தில் உள்ள கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் தொகுதிகள்  அ.தி.மு.க.வுக்கு சாதகமானவை. தென் சென்னை ; சிட்டிங் எம்.பி. அமைச்சர் ஜெயக்குமார் மகன்.

‘’இந்த 5 தொகுதிகளை  ஒருபோதும் பா.ஜ.க.வுக்கு தாரை வார்க்க முடியாது’’ அ.தி.மு.க. திட்டவட்டமாக தெரிவித்து விட்டதால்-

கூட்டணி பேச்சுவார்த்தை முடங்கி விட்டது.

—பாப்பாங்குளம் பாரதி