‘’காங்கிரஸ் கூட்டணி காலத்தின் கட்டாயம்’’ மனம் மாறிய மார்க்சிஸ்ட்……

மே.வங்க மாநிலத்தில் ,காங்கிரசை உடைத்து, திரினாமூல் காங்கிரஸ்(டி.எம்.சி.) என்ற புதிய கட்சியை தொடங்கும் வரை அங்கு இரண்டு கட்சிகள் மட்டுமே வலிமையாக இருந்தன.

ஒன்று-

காங்கிரஸ்.

மற்றொன்று-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

டி.எம்.சி.-நுழைந்த பின் –காங்கிரசும்,மார்க்சிஸ்டும் அந்த மாநிலத்தில் கரைந்து விட்டன.இரு கட்சிகளுமே தங்கள் தளங்களை இழந்து,தொண்டர்களையும் பறி கொடுத்து கையறு நிலையில் உள்ளன.

அங்கு இப்போது டி.எம்.சி.யும், பா.ஜ.க.வும் தான் பலசாலிகள்.நான்கு முனை  போட்டி ஏற்படும் பட்சத்தில் அங்கு மொத்தமுள்ள 42 தொகுதிகளையும் இந்த கட்சிகள் அள்ளி விடும்.

இதனால் மார்க்சிஸ்ட் தலைவர்கள் திகில் அடைந்துள்ளனர். டெல்லியில் கடந்த 2 நாட்களாக  நடந்த அந்த கட்சியின் பொலிட்பீரோ கூட்டத்தில் அவர்களின் பயம் வெளிப்பட்டது.

இது போன்ற கூட்டங்களில் சித்தாந்தங்களை பற்றி பேசுவார்களே,தவிர ஒரு போதும்,’’சீட்’’டுகள் குறித்து விவாதிப்பதில்லை.

அந்த கட்சியின்  வரலாற்றில் முதன் முறையாக –மக்களவையில் கட்சி எம்.பி.க்கள் எண்ணிக் கையை அதிகரிப்பது குறித்து பொலிட்பீரோவில் கவலையோடு விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு தற்போது 9 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்.இந்த எண்ணிக்கை மேலும் குறைந்தால்- கட்சியின் தேசிய அங்கீகாரம் பறிபோய் விடும் ஆபத்து உள்ளது.

தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரே நம்பிக்கை- கேரளா மட்டுமே.அங்கு ஏகப்பட்ட கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் அவர்களுக்கு பிரித்து கொடுத்தது போக எத்தனை தொகுதி கள் தங்களுக்கு கிடைக்கும்.. அவற்றில் வெற்றி எந்த அளவுக்கு இருக்கும் என்பது பிடிபடாத நிலையில்-

இந்த பொலிட்பீரோவில் புதிய வியூகங்கள் வகுக்கப்பட்டன.உள்ளூர் சூழலுக்கு ஏற்ப-மாநில அமைப்புகளே கூட்டணி குறித்து முடிவு எடுத்துகொள்ளலாம் என்று இந்த கூட்டத்தில் முடிவாகி உள்ளது.

வெற்றி பெறுவது காலத்தின் கட்டாயம் என்பதால் மே.வங்க மாநிலத்தில் காங்கிரசுடன் உடன்பாடு செய்து  கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

சி.பி.எம்.மின் இந்த முடிவை காங்கிரஸ் நிச்சயம் ஏற்றுகொள்ளும்.

ஏனென்றால் அவர்களுக்கும் வேறு வழி இல்லை.

–பாப்பாங்குளம் பாரதி