காபூல்: அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் வசம் சென்று விட்டதால் அங்கு வாழ அஞ்சிய பொதுமக்கள் பலரும் காபூல் நகர விமான நிலையத்துக்குள் குவிந்து வருகின்றனர். அங்கிருந்து புறப்படும் வெளிநாடுகளைச் சேர்ந்த விமானங்களில் ஏறி தப்பித்து வருகின்றனர்.  விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகம் திரண்டதால்,  நேட்டோ படையினரின் துப்பாக்கி சூடும் நடைபெற்றது. இதையடுத்து,  அந்த விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களின் பயணிகள் சேவை அனைத்தும் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் உள்நாட்டு மக்களும் கடும் அச்சத்தோடும் கொந்தளிப்பான மனநிலையிலும் உயிருக்கு பாதுகாப்பு தேடி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தாலிபான்கள் இன்று பகல் 12 மணியளவில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதில்,“ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் நாங்கள் பொது மன்னிப்பு அளிக்கிறோம். அதனால் யாரும் பதற்றம் அடையாமல் தத்தமது பணிகளைத் தொடரலாம். உங்களது உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் ஆப்கானில் இப்போது இருக்கும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களோடு தாலிபான்கள் கத்தார் நாட்டில் தொடங்கிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தாலிபன் துணைத் தலைவர் முல்லா பராதார் அகுந்த் பேசிய காணொலியில், “ஆப்கான் மக்கள் தங்களுடைய வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது,”  “இப்போது சரி செய்வதற்கான நேரம். எங்களுடைய சேவையை இந்த தேசத்துக்கு வழங்குவோம். ஒட்டுமொத்த தேசத்திலும் அமைதியை ஏற்படுத்துவோம். மக்களின் வாழ்வை மேம்படுத்த இயன்ற அனைத்தையும் செய்வோம்,” என்று முல்லா பராதார் அகுந்த் தெரிவித்துள்ளார்.