பசிபிக் கடலில் உள்ள ஜப்பானின் மினாமி யோடோ தீவுக்கருகில் புதிதாக பிறை வடிவிலான மணல் திட்டு உருவாகி இருப்பதாக ஜப்பான் கடற்படை தெரிவித்துள்ளது.

ஜப்பான் கடற்படையினர் மேற்கொண்ட ஆய்வில் ஆள் அரவமற்ற மினாமி யோடோ தீவுக்கருகில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக இந்த புதிய தீவு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

எரிமலை வெடிப்பால் இந்தப் பகுதியில் உள்ள கடல் மிகவும் வெப்பமாக இருப்பதாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கடல்சார் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற புதிய தீவுகள் உருவாவது புதிதில்லை என்று கூறும் அவர்கள், எரிமலை வெடிப்பால் வெளியேறும் சாம்பல் தீவு போல் உருவாவது தற்காலிகமானது என்கின்றனர்.

ஏற்கனவே 1904, 1914 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் இதேபோன்று எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட திடீர் தீவுகள், சிலகாலம் கழித்து காணாமல் போனதை நினைவு கூறுகிறார்கள்.

6000 க்கும் அதிகமான சிறு சிறு தீவுகளை கொண்ட ஜப்பானில் இதுபோன்ற குட்டி குட்டி தீவுகள் அவ்வப்போது உருவாவது சாதாரண நிகழ்வு தான் என்றாலும், கடந்த ஒரு வார காலமாக இந்தப் பகுதியில் ஏற்பட்டுவரும் எரிமலை வெடிப்பு மேலும் சில நாட்கள் தொடருமானால் இது தற்காலிக தீவாக இல்லாமல், ஜப்பானின் புதிய தீவாக உருவாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

110 க்கும் அதிகமான எரிமலைகளைக் கொண்ட ஜப்பான் கடல் பகுதியில் 47 எரிமலைகள் அந்நாட்டு வானிலை ஆராய்ச்சியாளர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.