புதுடெல்லி: கணவன் மனைவியை விட்டு வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தால் அதை மனைவிக்கு எதிரான கொடுமை என கருத முடியாது என்ற சர்ச்சைக்குரிய தீர்ப்பு ஒன்றை உச்சநீதி மன்றம் அளித்துள்ளது.

extra_marital

தீபா என்ற அந்தப் பெண்ணின் கணவர் அவருக்கு தெரியாமல் வேறொரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்திருந்ததால் மனமுடைந்த தீபா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தனது மகளின் மரணத்தை தாங்க முடியாமல் அவரது தாயும் அவரது சகோதரரும் தற்கொலை செய்து இறந்திருக்கின்றனர். மூன்று பேரின் மரணத்துக்கு காரணமான தீபாவின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் அமித்வா ராய் ஆகியோர் “தீபாவின் கணவர் செய்தது தவறு மற்றும் ஒழுக்கக்கேடான விஷயம் என்பதில் ஐயமில்லை. ஆனால் இவரது கள்ள தொடர்பை மனைவிக்கு எதிரான வன்கொடுமையாக கருத இயலாது. கணவர் மனைவியை உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ சித்ரவதை செய்திருந்தாலோ அல்லது இயல்புக்கு மாறான வகையில் நடந்து கொண்டிருந்தாலோதான் அதை குற்றமாக கருத இயலும். திருமணத்துக்கு வெளியே உறவு வைத்திருப்பது இ.பி.கோ 498-ஏ-வின்படி “மனைவிக்கு எதிரான கொடுமையாக” கொள்ள முடியாது.
தீபா விவாகரத்து அல்லது வேறு வழிகளை நாடியிருக்கலாம். கணவர் கள்ள தொடர்பு வைத்திருக்கிறார் என்று மனைவியின் மனதில் தோன்றும் சந்தேகத்தை மட்டுமே வைத்து தற்கொலைக்கு தூண்டினார் என்று கணவர் மீது இபிகோ 306 சட்டத்தின்படி குற்றம் சாட்ட இயலாது. ஆனால் இதை வைத்து விவாகரத்து எளிதாக வாங்கியிருக்கலாம் என்று தீர்ப்பளித்தனர்.
இதற்கு முன்னர் இந்த நபருக்கு கர்நாடகா உயர்நீதி மன்றம் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டி 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பெண்ணின் தகப்பனாருக்கு 50,000 பணமும் கொடுக்க சொல்லி தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.