மும்பை திம்பக் ரோட்டில் உள்ள ஒரு வங்கி வாசலில் 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பழைய நோட்டுக்களை மாற்றுவதற்காக நின்று கொண்டிருந்தார். நின்று கொண்டிருந்த நீண்ட க்யூவில் அவருக்கு மிகவும் பரிட்சயமான முகம் ஒன்று பளிச்சென்று தெரிந்தது. அது யாரென்று அருகில் போய் பார்க்கத்தான் தெரிந்தது.

boibank

நிற்பது வேறு யாருமல்ல, நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தன்னை ஏமாற்றிவிட்டு ஓடிய பழைய காதலன்…
அடுத்த சில நிமிடங்களில் க்யூவில் நின்று கொண்டிருந்த அனைவரையும் மிரள வைத்த அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் அரங்கேறின. கோவை சரளாவிடம் மாட்டிய வடிவேலுவின் கதி ஆனது அவரது முன்னாள் காதலனுக்கு!
அந்தப் பெண் தனது தந்தைக்கும் சகோதரனுக்கும் போன் செய்து வரச்சொல்ல அவர்களும் வந்து வங்கி அலுவலகர்கள், பணம் மாற்ற வந்த பொதுமக்கள் என்று அத்தனைபேர் முன்னிலையிலும் வைத்து அந்த நபரை துவைத்து எடுத்தனர். சிறிது நேரத்தில் போலீஸ் வந்து அவர்கள் மூவரையும் அழைத்து கொண்டு வாங்கிய அடியில் சின்னாபின்னமான அந்த நபரையும் அள்ளிப் போட்டுக்கொண்டு சென்றது.
தன்னை நம்ப வைத்து ஏமாற்றியதாக அந்த நபர் மீது அந்த பெண் புகார் கொடுத்திருக்கிறார். அதை போலீஸ் ஏற்றுக்கொண்டு விசாரித்து வருகிறது.